தமிழ்நாடு – கொரோனாவால் 10 நாட்களில் 921 பேர் மரணம்!

சென்னை: தமிழ்நாட்டில் கடந்த 10 நாட்களில் மட்டும் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மொத்தம் 921 பேர் இறந்துள்ளனர் என்ற புள்ளிவிபரம் வெளியாகியுள்ளது. இந்த எண்ணிக்கையானது, இதுவரையிலான மொத்த இறப்பு எண்ணிக்கையில் 22% ஆகும்.

தற்போதுவரை, தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4,241 என்பதாக உயர்ந்துள்ளது. நேற்றைய நாளான திங்கட்கிழமை மட்டும், மாநிலத்தில் இறந்தவர்களின் எண்ணிக்கை 109 என்ற உயர்ந்த எண்ணிக்கையில் பதிவாகியுள்ளது.

கடந்த10 நாட்களில் இறந்த 921 பேரில், 848 பேர், ஏற்கனவே இதர நோய்களால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களில், 457 பேர் சர்க்கரை நோயாலும், 366 பேர் உயர் ரத்த அழுத்த நோயாலும் பாதிக்கப்பட்டிருந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட இரண்டுவகை உடல்நலக் குறைபாடுகளுமே, ஒரு மனிதனின் நோய் எதிர்ப்பு சக்தியை பெரியளவில் பாதித்து, உடலை பலவீனப்படுத்தி விடுகிறது. இதுதான் இறப்பிற்கு காரணம் என்று மருத்துவத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.