வாஷிங்டன்:

அமெரிக்காவில் ஹெச்-4 விசா பெற்றவர்களில் 93 சதவீதம் பேர் இந்தியர்கள் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவில் பணியாற்று வெளிநாட்டு தொழிலாளர்களின் வாழ்க்கை துணைக்கு பணி வாய்ப்பு வழங்கும் வகையில் ஹெச்-4 விசா முறை அங்கு அறிமுகம் செய்யப்பட்டது. இதன் மூலம் அமெரிக்காவில் பணியாற்றும் ஆணின் மனைவியோ, அல்லது பெண்ணின் கணவரோ இந்த விசாவை பெற்று அமெரிக்காவுக்கு பணியாற்ற செல்ல முடியும்.

இந்த வகையில் இந்த விசாவை பெரும்பாலும் இந்தியர்கள் மட்டுமே பயனடைந்து வரும் தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் சமீபத்திய வாழ்க்கை துணை தொடர்பான அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.

அதில்,‘‘ஹெச் -4 விசா மூலம் வேலை வாய்ப்பு பெற விண்ணப்பம் செய்த தனிநபர்களில் 93 சதவீத இந்தியர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 7 சதவீதம் பேர் மட்டுமே ஆண்கள். 5 சதவீதம் பேர் சீனாவில் பிறந்தவர்கள். இதர நாடுகளை சேர்ந்தவர்கள் 2 சதவீதம் பேர் மட்டுமே இதில் இடம்பெற்றுள்ளனர். ’’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

2017ம் ஆண்டு டிசம்பர் 25ம் தேதி வரை ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 853 ஹெச்4 விசாவுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதில் 90 ஆயிரத்து 946 பேர் முதல் முறையாக அனுமதி பெற்றவர்கள். 32 ஆயிரத்து 219 பேர் புதுப்பித்தல், 668 பேர் காணாமல் போனதற்காக திரும்ப பெற்றவர்களாவர்.