கொல்கத்தா:

இந்தியாவில் 95 சதவீத தொழில் முனைவோர் தோல்வியை தழுவுவதாக நிதி ஆயோக் உறுப்பினர் பிபேக் தெப்ராய் தெரிவித்துள்ளார்.

கொல்கத்தா ஐஎம்ஐ.யில் நடந்த பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அவர் பேசுகையில், ‘‘ஒவ்வொரு இந்தியரும் பூத்து குலுங்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் ‘எழுந்திரு இந்தியா’ மற்றும் ‘புறப்படு இ ந்தியா’ திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

இது கார்பரேட் நிறுவனங்களுக்கான திட்டம் கிடையாது. நமது இந்திய கல்வி முறை தரமான தொழில் முனைவோரை உருவாக்குகிறதா? என்ற மிகப்பெரிய கேள்வி எழுந்துள்ளது. நாட்டில் தொழில் தொடங்கும் 95 சதவீத தொழில்முனைவோர் தோல்வி அடைகின்றனர்.

மாணவர்களுக்கு கேள்வி கேட்கும் தன்மையை நமது கல்வி முறை வளர்க்கவில்லை. கார்பரேட் நிறுவனங்களை விட சிறிய விவசாயிகள் அல்லது தெரு வியாபாரிகள் அதிக அளவில் தொழில் திறனை வெளிப்படுத்துகின்றனர். இந்தியாவின் தனி நபர் வருமானம் 1,800 டாலராக உள்ளது. வளர்ந்த நா டுகளோடு ஒப்பிடுகையில் இது மிக குறைவு’’ என்றார்.

பிரதமரின் பொருளாதார ஆலோசனை குழு தலைவராகவும் உள்ள பிபேக் தெப்ராய் மேலும், பேசுகையில்,‘‘ இந்தியாவின் சீரமைப்பு 1991ம் ஆண்டில் தொடங்கப்பட்டது. வளர்ந்த நாடுகளின் தனிநபர் வருமானத்திற்கும் நமது நாட்டின் தனி நபர் வருமானத்திற்கும் உள்ள இடைவேளியை பூர்த்தி செய்ய 153 ஆண்டுகள் ஆகும். ஆனால் இதற்கு 153 ஆண்டுகள் வரை காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை என்ற பாடம் கடந்த 20 ஆண்டுகளில் கற்கப்பட்டுள்ளது.

இந்தியாவின் கடந்த காலமும், எதிர்காலமும் பிரகாசமாக உள்ளது. ஆனால் தற்போதைய நிலை குறித்து எதுவும் கூற இயலாது. தற்போதைய நிலையில் இருந்து பார்த்தால் எதிர்காலம் மங்கலாக தான் இருக்கும்’’ என்றார்.