:96’ நீக்கப்பட்ட காட்சி வெளியீடு  

விஜய் சேதுபதி –  த்ரிஷா நடித்து பெரும் வெற்றிபெற்ற 96 திரைப்படத்தின் நீக்கப்பட்ட காட்சி வெளியிடப்பட்டு, யுடியூப்பில் வைரலாகி வருகிறது

பள்ளிப் பருவ ஈர்ப்பை மையமாகக் கொண்டு, விஜய் சேதுபதி –  த்ரிஷா நடித்த 96 திரைப்படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டது. குறிப்பாக ராம் மற்றும் ஜானு என்ற பெயர்கள் ரசிகர்களின் மனதில் நிலைகொண்டுவிட்டது.

இதில் த்ரிஷாவின் ஜானு என்ற பெயருக்கு படத்தில் ஒரு காரணம் கொடுக்கப்பட்டிருந்தது. அதாவது பாடகி ஜானகியின் பெயரை அவருக்கு சூட்டியதாக கூறப்பட்டிருந்தது. அத்துடன் படம் முழுவதும் ஜானு என்ற கதாப்பாத்திரம் பாடகி ஜானகியின் பாடலை மட்டும் பாடுவதுபோல காட்சிகள் அமைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் 96 படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்று இன்று வெளியிடப்படும் என நேற்று அறிவிப்பு வெளியாகியிருந்தது. அதேபோல் இன்று காட்சியும் வெளியிடப்பட்டது. அதில், விஜய் சேதுபதியும், த்ரிஷாவும் சாலையில் நடந்து செல்லும் போது, த்ரிஷாவின் பெயரை சேதுபதி கேட்க அவர் ஜானு என்று கூறுகிறார். பிறகு முழுப்பெயரை கேட்டவுடன் ஜானகி தேவி என்கிறார்.  இனிஷியலோடு பள்ளியில் கூப்பிடுவதை கூறுமாறு சேதுபதி மீண்டும் கேட்கிறார்.  அதற்கு த்ரிஷா எஸ்.ஜானகி என கூற, உடனே இதுவா என பாரு என்று பாடகி ஜானகியின் வீட்டில் இருக்கும் பெயர்ப்பலகையை சேதுபதி காண்பிக்கிறார்.

த்ரிஷா ஆச்சரியப்பட..  அதற்குள் அங்கு ஜானகியின் கார் வருகிறது.   ஜானகியின் டிரைவர் இருவரையும் யாரென்று விசாரிக்கிறார். பிறகு இருவரையும் ஜானகி தனது வீட்டிற்குள் அழைக்கிறார். உள்ளே சென்றதும், த்ரிஷாவிடம் கலகலப்பாக பேசும் ஜானகி, ஒருபாடலை பாடுமாறு கேட்கிறார்.
அதற்கு சேதுபதி, உங்கள் பாடலை தவிர வேறு யார் பாடலையும் இவர் பாடமாட்டார் என்கிறார்.

அதற்கு ஜானகி அப்படியெல்லாம் இருக்கக்கூடாது, பாடகராக மாறிவிட்டால் அனைவரது நல்ல பாடல்களையும் பாடவேண்டும் என்கிறார்.  பிறகு த்ரிஷா பாடல் ஒன்றை பாட, அதில் ஜானகி சில சிறு திருத்தங்களை கூறி அவரும் சேர்ந்து பாடுகிறார். அடுத்து, த்ரிஷாவின் பெயரைக்கேட்கும் ஜானகி, தனது பெயரே த்ரிஷா வைத்திருக்க ஆனந்த ஆச்சரியமடைகிறார்.

இந்தக் காட்சி தான் தற்போது யு டியுபில் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது இந்த வீடியோ காட்சி வைரலாகி வருகிறது.

You may have missed