96 எம்.பி.க்களை அலற வைத்துள்ள கொடூர பின்னணி பாடகி..

மும்பை

கொரோனா பாதிப்பு அடைந்த இந்தி பின்னணி பாடகி கனிகா கபூர் குறித்த விவரங்கள்

இந்தி திரை உலகில் கொடி கட்டி பறக்கும் பின்னணி பாடகி, கனிகா கபூர்.

லண்டன் சென்று விட்டு கொரோனா வைரசை செல்களில் சுமந்து வந்த அவர், கடந்த 15 ஆம் தேதி மும்பை விமான நிலையத்தில் வந்திறங்கினார்.

அரசு அறிவுறுத்தியுள்ள படி கொரோனா பரிசோதனை எதனையும் கனிகா மேற்கொள்ளவில்லை. அவர் எப்படி சோதனைகளில் இருந்து தப்பினார் என்பதும் மர்மங்களில் ஒன்று.

மறுநாள் உ.பி.மாநிலம் லக்னோ சென்ற கனிகா அங்கு அன்றைய தினம் நடந்த மூன்று விருந்து  நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார்.

அன்று நடந்த இரவு விருந்தில் கனிகாவுடன், வி.வி.ஐ.பி.க்கள் பலரும் பங்கேற்றுள்ளனர்.

ராஜஸ்தான் முன்னாள் முதல்வர் வசுந்தரராஜே அவரது மகனும் , மக்களவை உறுப்பினருமான துஷ்யந்த் ஆகியோர் இதில் அடக்கம்.

இவர்கள் , கனிகாவுடன் ஒன்றாக அமர்ந்து விருந்து சாப்பிட்டுள்ளனர்.

இந்த நிலையில் டெல்லி சென்ற துஷ்யந்த் மக்களவை கூட்டங்களில் வழக்கமாகப் பங்கேற்றுள்ளார்.

கடந்த 18 ஆம் தேதி குடியரசுத் தலைவர் மாளிகையில் உ.பி. மற்றும் ராஜஸ்தான் மாநில எம்.பி.க்களுக்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த்,  விருந்தளித்தார்.

ராஜ்நாத்சிங் உள்ளிட்ட மத்திய அமைச்சர்கள், நடிகை ஹேமமாலினி உள்ளிட்ட 96 எம்.பி.க்க்கள் குடியரசு தலைவருடன் விருந்துண்டனர்.

லக்னோவில் பாடகி கனிகா விருந்தில் பங்கேற்ற துஷ்யந்தும், இந்த விருந்தில் கலந்து கொண்டு,ஜனாதிபதி மாளிகையில் வலம் வந்துள்ளார்.

அனைவரும் ’குரூப்’ போட்டோவும் எடுத்துக்கொண்டனர்.

இந்த நிலையில் தான் 96 எம்.பி.க்களையும் இரு தினங்களுக்கு முன்னர் இடியும், மின்னலும் ஒரு சேர தாக்கியது.

பாடகி கனிகாவை கொரோனா வைரஸ் தாக்கியுள்ளதாக வெளியான செய்தியே அதற்குக் காரணம்.

இந்த செய்தியை கனிகாவே, ‘எனக்கு கொரோனா தாக்குதல் ஏற்பட்டுள்ளது, லக்னோவில் சிகிச்சை பெற்று வருகிறேன்’’ என்று தம்பட்டம் அடித்திருந்தார்.

இந்த செய்தி அறிந்து முதலில் அதிர்ந்து போனது- கனிகாவுடன் விருந்தில் பங்கேற்ற வசுந்ந்தரராஜேவும், அவர் மகன் துஷ்யந்தும் தான்.

கனிகாவை தொற்றிய கொரோனா, தங்களையும் தாக்கி இருக்கலாம் என்ற பீதியில் தாயும் , மகனும் தங்களைத் தனிமைப் படுத்திக்கொண்டனர்.

ஜனாதிபதி அளித்த விருந்தில் துஷ்யந்துடன் கலந்து கொண்ட பிற எம்.பி.க்கள் பீதியில் உறைந்துள்ளனர். அவர்களில் சிலர் , கொரோனா பரிசோதனை செய்துள்ளனர்.தங்களைத் தனிமைப் படுத்தியுள்ளனர்.

குடியரசுத் தலைவர் ராம்நாத், தனது நிகழ்ச்சிகளை எல்லாம் ரத்து செய்து விட்டார்.

நாடாளுமன்றத்தில், போக்குவரத்து நிலைக்குழு கூட்டத்தில் துஷ்யந்துடன்  2 மணி நேரம் கழித்த திரினாமூல் காங்கிரஸ் எம்.பி. டெரிக் பிரையனும் தன்னை  தனிமைப் படுத்திக்கொண்டு,துஷ்யந்தை திட்டி தீர்த்து வருகிறார்.

கனிகா லக்னோவில் தங்கி இருந்த நட்சத்திர ஓட்டலைக் காலவரையின்றி அந்த மாநில அரசு மூடிவிட்டது.

உச்சமாக, பாடகி கனிகா மீது வழக்குப்பதிவும் செய்யப்பட்டுள்ளது.

இதுதான் கொரோனாவின் கோர முகம்… நாட்டின் முதல் குடிமகனான இந்தியக் குடியரசுத் தலைவரையும் அலறவைத்துவிட்டுள்ளார்கள்.

– ஏழுமலை வெங்கடேசன்