காஷ்மீரில் 9730 கல்லெறி வழக்குகள் வாபஸ் : முதல்வர் அறிவிப்பு

ஸ்ரீநகர்

ம்மு காஷ்மீர் மாநில அரசு 9730 பேர் மீதுள்ள கல்லெறி வழக்குகள் ரத்து செய்யப் படும் என முதல்வர் மெகபூபா அறிவித்துள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநில சட்டசபையில் கேள்வி நேரத்தில் மாநிலத்தில் நடைபெறும் கல்லெறி சம்பவங்கள் குறித்தும் அதன் மீதான நடவடிக்கைகள் பற்றியும் கேள்வி எழுப்பப் பட்டது.   அந்தக் கேள்விக்கு அம்மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி எழுத்துப் பூர்வமான பதில் ஒன்றை விளக்கமாக அளித்துள்ளார்.

அந்த பதிலில், மெகபூபா, “கடந்த 2018 முதல் 2017 வரை கல்லெறியும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்துள்ளன.   அது குறித்து வழக்குகளும் பதியப்பட்டுள்ளன.    அது தவிர தீவிரவாத சம்பவங்கள் மற்றும் தீவிரவாதக் குழுக்களுடன் சம்பந்தப் பட்டவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.   இதில் முதல் முறையாக குற்றம் செய்தவர்களும்,  மற்றவர்களுடன் சேர்ந்து தெரியாமல் கல்லெறிந்தவர்களும் அதிகம் பேர் உள்ளனர்.

அவர்களில் 9730 பேர் மீதுள்ள கல்லெறி வழக்குகள் ரத்து செய்யப்படும்.  இவ்வாறு ரத்து செய்யப்பட்ட வழக்கில் உள்ளவர்கள் பற்றிய விவரம் அறிவிக்கப்பட மாட்டாது.  அந்த வழக்கில் சம்பந்தப்பட்டவர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர் நலத்தை ஒட்டி இந்த விவரங்கள் வெளிப்படுத்த இந்த அரசு விரும்பவில்லை.   இவ்வாறு விடுதலை செய்யப்படுபவர்கள் முதல் முறை அல்லது ஒரு முறை மட்டுமே குற்றம் செய்தவர்கள்  ஆவார்கள்.   இவர்களுக்கு பொது மன்னிப்பு அளிக்கப்பட்டுள்ளது

இது தவிர தீவிரவாதத்துடன் தொடர்புடையவர்களும்,  கல்லெறிவதை வழக்கமாக கொண்டவர்கள் மீதும் வழக்கு தொடரப்பட்டுள்ளது.  அவர்களுக்கு எந்த ஒரு மன்னிப்பும் வழங்கப் படவில்லை.   அவர்கள் மீதான சட்டபூர்வமான நடவடிக்கை தொடர்கிறது” என தெரிவித்துள்ளார்.