98% பேருக்கு அறிகுறியே இல்லாமல் கொரோனா… சென்னை மாநகராட்சி ஆணையாளர் தகவல்

--

சென்னை:

சென்னையில் கொரோனா பாதித்தவர்களில் 98 சதவீதம் பேருக்கு எந்தவித அறிகுறியும் தென்படவில்லை என சென்னை மாநகராட்சி ஆணையாளர் பிரகாஷ் தெரிவித்து உள்ளார்.

தமிழகத்திலேயே கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதியாக சென்னை மாநகரம் திகழ்கிறது. இங்கு நாளுக்கு நாள் தொற்று அதிகரித்து வருவதால் கோயம்பேடு சந்தை மூடப்பட்டு உள்ளது. மேலும் வீடு வீடாகவும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த  சென்னை மாநகராட்சி கமிஷனர் பிரகாஷ் கூறியதாவது,

தமிழகத்தில் அதிகபட்சமாக, சென்னையில் 768 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி யுள்ளது. சென்னையில் கொரோனா பாதித்தவர்களுக்கு நடத்தப்பட்டு வரும் சோதனையில்,. 98 சதவீதம் எந்தவித அறிகுறியும் இல்லாமலே கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது. கொரோனா பரவலை தடுக்கும் வகையில்  பாதுகாப்பு கருதியே கோயம்பேடு சந்தையில் சில்லறை விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த 24ம் தேதி, சென்னை சிந்தாதிரிப்பேட்டை பகுதியை சேர்ந்த 27 வயது பெண்ணுக்கு கஸ்தூரிபா காந்தி அரசு மகப்பேறு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 28 ம் தேதி அந்த பெண்ணுக்கு குழந்தை பிறந்தது. ஆனால், சில மணி நேரத்தில் தாயும், குழந்தையும் இறந்தனர். பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தது. அதில், அந்த பெண்ணுக்கு கொரோனா உள்ளது உறுதியானது.

இதனையடுத்து அவரது உறவினர்கள், பிரசவம் பார்த்த டாக்டர்கள், நர்சுகள், அவருடன் இருந்த நேயாளாளிகள் என 40க்கும் மேற்பட்டவர்களை சுகாதாரத்துறையினர் தனிமைப்படுத்தி கண்காணிப்பில் வைத்துள்ளனர்.

அதுபோல சென்னை வளசரவாக்கத்தை சேர்ந்த 65 வயதுஆண்டு நுரையீரல் புற்றுநோயால் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு நடந்த பரிசோதனையில் கொரோனா உள்ளது தெரியவந்தது. அவர் ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர், நேற்று(ஏப்., 29) உயிரிழந்தார்.

இதனையடுத்து சென்னையில் மட்டும் கொரோனா வைரசுக்கு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக அதிகரித்துள்ளது. இதனிடையே, புற்றுநோய் பாதித்தவரின் 26 வயது மகனுக்கும் கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

கோயம்பேடு மார்க்கெட்டுக்கு வேலைக்கு சென்று திரும்பிய 35 பேர் விழுப்புரம் மாவட்டத்தில் தனிமைப்படுத்தப்பட்டனர். அவர் அனைவரும், பாதிராப்புலியூர், கொரளூர், தென்ஆலப்பாக்கத்தை சேர்ந்தவர்கள். இவர்களை சுகாதாரத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.