மும்பை:

உலகளவில் ஒரு ஓடுபாதையை கொண்டு மிகவும் பரபரப்பாக இயங்கும் விமான நிலையங்களில் மும்பை விமானநிலையமும் ஒன்று. இந்தியாவில் இது 2வது பெரிய விமான நிலையமாகும். கடந்த மாதம் 20ம் தேதியன்று மும்பை விமானநிலையம் புதிய சாதனை படைத்துள்ளது.

அன்று ஒரே நாளில் 24 மணி நேரத்தில் 980 விமானங்களை கையாண்டுள்ளது. இதற்கு முன் கடந்த டிசம்பர் 6ம் தேதி ஒரே நாளில் 974 விமானங்களை கையாண்டதே உலக சாதனையாக இருந்து வந்தது. தற்போது தனது சாதனையை தானே முறியடித்துள்ளது இந்த விமான நிலையம்.

பிரிட்டன் நாட்டில் கேட்விக் விமானநிலையம் ஒரு ஓடுபாதையை கொண்ட அந்நாட்டின் 2வது பெரிய விமானநிலையமாகும். வரும் கோடை காலத்தில் இந்த விமானநிலையம் 870 விமானங்களை தினமும் கையாளும் திறன் கொண்டுள்ளது என்று பிரிட்டன் விமானநிலைய ஒருங்கிணைப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.

ஆனால், எதிர்பாராதவிதமாக மும்பை விமானநிலையம் இந்த சாதவையை படைத்துவிட்டது. கேட்விக் விமானநிலையம் அதிகாலை 5 மணி முதல் நள்ளிரவு வரை என 19 மணி நேரம் மட்டுமே இயங்கும். இந்த கட்டுப்பாடு அங்கு 1971ம் ஆண்டு முதல் அமலில் உள்ளது.

மும்பை விமானநிலையம் 24 மணி நேரமும் செயல்படுகிறது. மும்பையில் ஒரு மணி நேரத்திற்கு 52 விமானங்களும், கேட்விக்கில் 55 விமானங்களும் கையாளப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.