பியாங்யாங்: வடகொரியாவின் தலைமை மக்கள் மன்றத்திற்கு, இந்த 2019ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில், மொத்தம் 99.99% வாக்குகள் பதிவாகியுள்ளன என்று அந்நாட்டின் மத்திய செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

கடந்த 2014ம் ஆண்டு நடத்தப்பட்ட தேர்தலில் 99.97% வாக்குகள் பதிவாகின. 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடத்தப்படுகிறது.

ஒற்றை வேட்பாளர் தேர்தல் என்று நகைக்கப்படும் வடகொரிய தேர்தலில் பதிவாகும் வாக்கு சதவிகிதத்தோடு ஒப்பிடும்போது, உலகின் ஜனநாயக நாடுகள் எனப்படும் வேறுபல நாடுகளின் தேர்தல்களில் பதிவாகும் வாக்கு சதவிகிதம், அருகில்கூட வர முடிவதில்லை.

தலைமை மக்கள் சபை என்று சொல்லப்பட்டாலும், அந்த சபைக்கு எந்த அதிகாரமும் கிடையாது. அனைத்து அதிகாரங்களும் குவிந்திருக்கும் ஒரே இடம் அதிபர் மாளிகைதான்.

வெளிநாடுகளில் பணிபுரிவோர் மற்றும் கடல்சார்ந்த பணிகளில் ஈடுபட்டிருப்போர் வாக்களிக்க வரமுடியாமல் போனதால்தான், 100% வாக்குப்பதிவு என்ற இலக்கை எட்டமுடியாமல் போனதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடந்த 2014 தேர்தலைப் போலவே, இந்தமுறையும், பதிவான அனைத்து வாக்குகளும், அறிவிக்கப்பட்ட வேட்பாளர்களுக்கு ஆதரவாகவே விழுந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

– மதுரை மாயாண்டி