திருச்செங்கோடு: சுதந்திரத்திற்கு பின்பு அமைக்கப்பட்ட தற்காலிக நாடாளுமன்றத்தில் உறுப்பினராக இருந்த 99 வயது டி.எம்.காளியண்ணா, இந்த வயதிலும் தவறாமல் வாக்களித்துள்ளார்.

நாமக்கல் நாடாளுமன்ற தொகுதியில் அமைந்த திருச்செங்கோட்டில் இவர் வாக்களித்தார்.

1948ம் ஆண்டு அமைக்கப்பட்ட அந்த நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களில், தற்போது உயிரோடு இருக்கும் ஒரே நபர் இவர்தான். மேலும், அரசியல் நிர்ணய சபையில் உறுப்பினர்களாக இருந்தவர்களில், தற்போது உயிருடன் இருக்கும் ஒரே நபரும் இவர்தான் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஒருங்கிணைந்த சேலம் மாவட்டத்தின் (இன்றைய சேலம், நாமக்கல், தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி) முதல் நாடாளுமன்றவாதி இவர்தான். இவர், குமாரமங்கலம் ஜமீன்தார் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

தனது பேரனின் உதவியுடன் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களித்த காளியண்ணா, “ஜனநாயகத்தின் மீது நம்பிக்கை வைத்து, தவறாமல் வாக்களிப்பதன் மூலமாக, தான் அனைவருக்கும் முன்னுதாரணமாக இருக்க விரும்புகிறேன்” என்று தெரிவித்தார்.

– மதுரை மாயாண்டி