தேனி : 10 வயது சிறுமி  பலாத்காரம் செய்து கொன்ற மூவருக்கு தூக்கு! :  மகளிர் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

10 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொன்ற வழக்கில், மூவருக்கு தூக்குத் தண்டனை விதித்து தேனி மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தேனி மாவட்டம், சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தை சேர்ந்தவர் கணேசன். கேரள மாநிலம் எர்ணாகுளம் அருகே ஆலுவா நகராட்சியில் பணிபுரிந்து வருகிறார். இவரது மூத்த மகளான 10 வயது சிறுமி இதே கிராமத்தில் உள்ள பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வந்தார்.

2014, டிசம்பர் 1ம் தேதி பள்ளி முடிந்து வீடு திரும்பிய சிறுமியை காணவில்லை. இதையடுத்து குடும்பத்தினர் ஓடைப்பட்டி போலீசில் புகார் அளித்தனர். போலீசார் சிறுமியை தேடிவந்த நிலையில், மறுநாள் அதே கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் சிறுமி பிணமாக மீட்கப்பட்டார். பிரேத பரிசோதனையில் சிறுமி பாலியல் பலாத்காரம் செய்து, கழுத்து எலும்பு ஒடிந்த நிலையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. 

வழக்கு பதிந்த போலீசார் காமாட்சிபுரம் அம்பேத்கர் காலனியை சேர்ந்த சுந்தர்ராஜ் (29), ராபின் (எ) ரவி (27), குமரேசன் (23) ஆகியோரை கைது செய்தனர். மூவரும் சிறுமியை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்து, கொன்று கிணற்றில் வீசி விட்டு சென்றது விசாரணையில் தெரிய வந்தது.

இந்த வழக்கு விசாரணை கடந்த 4 ஆண்டுகளாக தேனி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. சிறுமி தரப்பில் அரசு வழக்கறிஞர்  ராஜராஜேஸ்வரி வாதிட்டார். வழக்கு விசாரணை முடிந்து  கூடுதல் அமர்வு நீதிபதி வி.திலகம் நேற்று தீர்ப்பளித்தார். குற்றம் சாட்டப்பட்ட மூவரும் குற்றவாளிகள் என்பதை உறுதி செய்து, மூவருக்கும் கொலை குற்றத்துக்காக தூக்கு தண்டனையும், பாலியல் வன்கொடுமை தடுப்புச்சட்டத்தின் கீழ் மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.50 ஆயிரம் அபராதமும் விதித்தும் தீர்ப்பளித்தார்.

கொலையான சிறுமியின் குடும்பத்தினருக்கு அரசு இழப்பீட்டுத்தொகை அளிக்க வேண்டும் எனவும் தீர்ப்பில் கூறினார்.

இதையடுத்து  குற்றவாளிகள் மூவரும் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

சிறுமி பலாத்கார கொலை வழக்கில் மூவரும் கைதான நாள் முதல் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். மூவரும் பலமுறை ஜாமீன் கேட்டு, தேனி மாவட்ட நீதிமன்றம், ஐகோர்ட் மதுரை கிளையில் மனு செய்தபோதும், ஜாமீன் அளிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.