அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் சாதனை – 25 வயது இளைஞர் உறுப்பினராக தேர்வு!

நியூயார்க்: அமெரிக்க நாடாளுமன்ற வரலாற்றில் முதன்முறையாக 25 வயதுள்ள இளைஞர் ஒருவர் உறுப்பினராக தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

கடந்த 1990களில் பிறந்த மேடிசன் காதோர்ன், வடக்கு கரோலினா பகுதியிலிருந்து குடியரசு கட்சியின் சார்பில் நாடாளுமன்றத்திற்கு தேர்வுசெய்யப்பட்டுள்ளார்.

“புதிய குடியரசு கட்சி உருவாவதற்கான நேரம் இது என்று நான் நம்புகிறேன். நமக்கு இந்நேரத்தில் வெறுமனே பெரிய கூடாரம் மட்டும் தேவையில்லை; மாறாக, அது தைரியமான கூடாரமாகவும் இருக்க வேண்டுமென நினைக்கிறேன்.

கடந்த காலங்களில், ஜனநாயகக் கட்சியினர் லாவகமாக செயல்பட்டு, பெயர் வாங்கியிருக்க வேண்டிய விஷயங்களில் நாம் கோட்டைவிட்டோமென நினைக்கிறேன்” என்றுள்ளார் அவர்.

ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் முதன்மை செயல் அதிகாரியாக பணியாற்றிவரும் மேடிசன், ஒரு ஊக்குமூட்டும் பேச்சாளரும்கூட.

சமய சுதந்திரம், எல்லைப் பாதுகாப்பு மற்றும் கருகலைப்பு எதிர்ப்பு உள்ளிட்ட விஷயங்களில் பிடிப்புள்ளவர் மேடிசன் என்பதும் குறிப்பிடத்தக்கது.