ஊரடங்கால் பரிதாபம்.. தரமணியில் தற்கொலை செய்துகொண்டமுடிதிருத்தும் தொழிலாளி…

சென்னை:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு, கஷ்டப்பட்டு வந்த முடிவெட்டும் தொழிலாளி ஒருவர் இன்று தற்கொலை செய்துகொண்டார். இந்த சம்பவம் சென்னையில் நடந்தேறியுள்ளது. இது மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கொரோனா வைரஸ் கொடுமையால் நாடு முழுவதும் கடந்த மார்ச் மாதம் 24ந்தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது.  இதனால் சாமானிய மக்கள் முதல் தினசரி கூலிகள், அமைப்புசாரா தொழிலாளர்கள் என பல தரப்பினரும் கடும் பாதிப்புக்கு ஆளாகி உள்ளனர். மத்திய மாநில அரசுகள் கொடுத்துள்ள நிவாரண உதவிகள் யானைப்பசிக்கு சோளப்போறி போன்றே உள்ளது.
இந்த நிலையில், மே 4ந்தேதி முதல் சில கடைகள் திறக்க அரசு அனுமதி வழங்கியுள்ள நிலையில், முடிதிருத்தும் கடையான பார்பர் ஷாப் திறக்க அனுமதி மறுக்கப்பட்டு உள்ளது.
இந்த நிலையில், கடுமையான பணக்நெருக்கடியில் சிக்கி, குடும்பத்தை நகர்த்த முடியாமல் தவித்து வந்த சென்னை தரமணி பகுதியைச் சேர்ந்த முடிதிருத்தும் நபர் ஒருவர் தற்கொலை செய்துகொண்டார்.
கடந்த 2 மாதமாக கடைக்கும், வீட்டுக்கும் வாடகை செலுத்த முடியாமல் திண்டாடி வந்த நபர், வாடகைதாரர்களின் நெருக்குதல் ஒருபுறம், குடும்பத்தின் கஷ்ட ஜீவனம் மற்றொரு புறம் என்ற சிக்கிலில் உழன்று வந்த  நிலையில்,  இன்று திடீரென தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை  ஏற்படுத்தி உள்ளது.