கடல் அலையில் மூழ்கிய இருவரை காப்பாற்ற முயன்று தனது உயிரை தியாகம் செய்த சிறுவன்

கால்பந்து ரசிகர்கள் அதிகம் உள்ள கேரளாவில் பிரான்ஸ் அணி உலக கோப்பை போட்டியில் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதை கொண்டாடி வருகின்றனர். அதே வேளையில் கண்ணூர் மாவட்டம் 14வயதான சிறுவனின் இறப்பினால் துக்கத்தில் மூழ்கியுள்ளது. கால்பந்து போட்டியின் தீவிர ரசிகரான 14வயதுடைய பிரோஸ் உலக கோப்பை போட்டியில் பிரான்ஸ் அரையிறுதிக்கு செல்லும் என்று முன்கூட்டியே கணித்திருந்தார். அவருக்கு பிடித்த பிரான்ஸ் அணி அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியதை பார்க்காமலேயே இரண்டு பேரின் உயிரை காப்பாற்றிவிட்டு பிரோஸ் இறந்தது அனைவரையும் சோகத்தில் மூழ்கடித்தது.

firoz_kannur

கன்னூர் மாவட்டத்தில் உள்ள கடலாயி கடலோரத்தில் பிரோஸ், அவரது இளைய சகோதரர் ஃபஹத் ( வயது 13) மற்றும் நண்பர்கள் கால்பந்து விளையாட சென்றனர். மகிழ்ச்சியுடன் விளையாடிய பிரோசிற்கு அதுதான் கடைசி தருணம் என்பதை யாரும் நினைத்துக்கூட பார்த்திருக்க முடியாத ஒன்று. அவர்கள் விளையாடி கொண்டிருந்த பந்து கடல் அலையில் சென்று விழுந்தது. அதனை எடுக்க ஃபஹத் சென்ற போது அலையில் மாட்டிக்கொண்டார். அவரை காப்பாற சென்ற நண்பரும் அலையில் சிக்கிகொண்டார். தனது சகோதரர் மற்றும் நண்பன் அலையில் சிக்கியதை பார்த்த பிரோஸ் ஓடி சென்று அலையில் குதித்து அவர்களை கரைக்கு கொண்டுவர முயன்றான். அவர்கள் இருவரையும் மேலே தூக்கிவிட்ட ஃபிரோஸ் கடல் அலையில் மூழ்கடிக்கப்பட்டார்.

கடலில் மூழ்கிய பிரோசிற்கு உதவிகள் கிடைக்க கிட்டத்தட்ட 15 நிமிடங்கள் எடுத்துகொண்டன. அதன்பிறகு கரைக்கு தூக்கிவரப்பட்ட பிரோஸ் மயக்க நிலையில் மருத்துவமனைக்கு எடுத்து செல்லப்பட்டார். கடல் அலையில் சிக்கிய இரு சிறுவர்களை காப்பாற்றிய பிரோஸ் ஆபத்தான நிலையில் 5 நாட்கள் வரை உயிருக்கு போராடினார். இந்நிலையில் திங்கட்கிழமை அவரது உயிர் இந்த உலகத்தை விட்டு பிரிந்தது.

செவ்வாய்க்கிழமை அவருக்கு இறுதி சடங்குகள் செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், அதற்கு கூட வசதியில்லாமல் அவரது குடும்பம் வறுமையில் வாடியது. பிரோசின் தந்தை பெயிண்டிங் வேலை பார்த்து வருகிறார். தாய் வீட்டில் உள்ளார். பிரோசின் இறப்பு குறித்து அவரது சகோதரர் பேசியபோது “ என்னை காப்பாற்றுவதற்காக முயன்று அவன் இறந்து விட்டான், எனக்கு அண்ணன் வேண்டும், அவனை எப்படி மீண்டும் வீட்டிற்கு அழைத்து செல்வேன், யா அல்லா..” என்று கதறி அழுதது அனைவரது கண்களையும் ஈரமாக்கியது.

கண்ணூரில் உள்ள உள்ளூர் செய்தியாளர்கள் கூறுகையில் “ பிரோஸ் தனது வீட்டில் உள்ள முன்பக்க தூணில் பிரான்ஸ் நாட்டின் கொடியை கைகளால் வரைந்துள்ளார். அவன் ஒரு நல்ல மகனாகவும், கால்பந்து போட்டியை அதிகளவில் விரும்பும் ரசிகனாகவும் இருந்துள்ளார். பிரோஸ் இறப்பு குறித்து மிகுந்த சோகத்தில் வாடிய அவரது சகோதரரான ஃபஹதுக்கு அவர்களின் தாய் ஆறுதல் கூறினார்” என்று கண்ணீருடன் தெரிவித்தனர்.

தான் இறக்கும் தருவாயிலும் இரண்டு உயிர்களை காப்பாற்றிய பிரோஸ் அனைவரது உள்ளங்களிலும் வாழ்ந்து வருகிறார். அவருக்கு மிகவும் பிடித்த பிரான்ஸ் அணி உலக கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் பங்கேற்று விளையாடுவதை எங்கோ ஒரு மூலையில் இருந்து அவரது ஆத்மா பார்த்து கொண்டிருக்கும்.