கோவை:

சென்ற வருடம் செப்டம்பர் மாதம் சென்னையில் குடிபோதையில் கார் ஓட்டி ஆட்டோ ஓட்டுனர் ஒருவர் உயிரை பறித்த கார் பந்தய வீரர் விகாஸ் ஆனந்த் கோவையில் நேற்று நடந்த போட்டியில் பங்கேற்று 3வது இடம் பெற்றுள்ளார்.

சென்னை ஆழ்வார்பேட்டையில் கார் பந்தய வீரர் விகாஸ் ஆனந்த்  குடிபோதையில் கார் ஓட்டியபோது ஏற்பட்ட விபத்தில் ஆட்டோக்களின் மீது அவரது கார் ஏறியது.  அதில் ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்தார்.

இதனால் சிறைக்கு சென்ற விகாஸ் ஆனந்த் தற்போது ஜாமீனில் வெளிவந்துள்ளார்.  ஜாமீனில் வெளியே வருபவர்களுக்கு மீண்டும் வாழ்வு வசப்பட சிறிது காலம் பிடிக்கும். ஆனால், கார் பந்தய வீரர் விகாஸ்  ஆனந்துக்கு அப்படியில்லை போல் தெரிகிறது

ஆம்,  அதிசயமான ஒரு நிகழ்வு,

நேற்று கோயமுத்தூர் மாவட்டம் கரிமேடு போட்டி களத்தில் நடைபெற்ற ஜெ.கே. தேசிய கார் பந்தயத்தில் மூன்றாவது இடத்தை பிடித்துள்ளார் விகாஸ் ஆனந்த். டைம்ஸ் ஆப் இந்தியா ஆங்கில நாளிதழுக்கு அவர் அளித்த பேட்டியில் “இது போட்டிக்கான காலம் இல்லை தான், ஆனாலும் இன்னும் வேகமாக கார் ஓட்டும் நிலைக்கு சீக்கிரமே திரும்புவேன்” என்றார்.

ஆழ்வார்பேட்டையில் நடந்த விபத்தில் ஆட்டோக்களின் மீது மோதியது குறித்து வெளிப்படையாக பேசத்தயங்கிய விகாஸ், “அந்த மோசமான சம்பவத்திலிருந்து வெளியேறி பழைய நிலைக்கு திரும்பிக்கொண்டிருக்கிறேன்” என்றும் கூறியுள்ளார். இந்த விபத்தால் சிறைத் தண்டனை கிடைத்தாலும் ஜாமீனில் வந்து கார்பந்தயத்தில் பங்கேற்றுள்ளார் 23 வயது விகாஸ்.

அதேபோல், சிறைவாழ்வு குறித்து கேட்ட கேள்விகளுக்கும்   விகாஸ் பதில் அளிக்கவில்லை. ”எனது குரு அக்பர் ஆபிரகாமின் பரிபூரண ஆசியுடன் எல்லா சிரமங்களைத்தாண்டி மீண்டும் நட்சத்திரமாக விரைவில் வலம் வருவேன்” என்று மட்டும் கூறியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்தியதால், இந்திய மோட்டார் விளையாட்டு கிளப், விகாஸின் ஓட்டுநர் உரிமத்தை ரத்து செய்திருந்தது.  அதற்கு அவர் செய்திருந்த அப்பீலுக்கு இணங்க நீதிமன்ற இறுதி தீர்ப்பு வரும் வரை கார் பந்தயங்களில் பங்கேற்க அந்த அமைப்பு அனுமதியளித்திருந்தது குறிப்பிடத்தக்கது