கமல் தத்தெடுத்த கிராமத்தில் மர்மக்காய்ச்சலால்   குழந்தை சாவு

திருவள்ளூர் அருகே கமல்ஹாசன் தத்தெடுத்த அதிகத்தூர் கிராமத்தில் சிறுமி மர்மக் காய்ச்சலால் வெள்ளிக்கிழமை உயிரிழந்தார். .

திருவள்ளூர் பகுதியில் மாறிவரும் சீதோஷ்ண நிலை காரணமாக அப்பகுதியில் மர்மக் காய்ச்சல் பரவி வருகிறது. இதனால், மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் ஏராளமானோர் சிகிச்சை பெற வந்துகொண்டிருக்கிறார்கள்.

அஸ்விதா நிதீஷ் வீரா

ஏற்கெனவே இந்த மருத்துவமனையில் 78 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

கடந்த நான்கு நாட்களில் திருத்தணி பட்டாபிராமபுரம் முனிகிருஷ்ணன் (33), கேசவராஜபேட்டை சுப்பிரமணி மனைவி சின்னக்குழந்தை (70), திருவாலங்காடு பகுதியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் மகன் ராஜேஷ் (30) உள்ளிட்ட 11 பேருக்கு மர்மக் காய்ச்சலுக்கான அறிகுறி கண்டறியப்பட்டது. இவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்தநிலையில், மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன் தத்தெடுத்த கடம்பத்தூர் ஊராட்சி ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தைச் சேர்ந்த கார்த்திக் மகள் அஸ்விதா (3) கடந்த சில தினங்களுக்கு முன் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையடுத்து, குணமடைந்த நிலையில் வீட்டிற்குச் சென்றார்.  ஆனால், மீண்டும் காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் வெள்ளிக்கிழமை அதிகாலையில் அஸ்விதா மரணமடைந்தார்.

இதேபோல், திருவள்ளூர் நகராட்சி, 16-ஆவது வார்டு சின்ன எடப்பாளையம் பகுதியைச் சேர்ந்த கணேஷின் மகன் நிதீஷ் வீரா (வயது 6). இவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருவள்ளூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில், மேல் சிகிச்சைக்காக சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டார். ஆனால், கொண்டு செல்லும் வழியிலேயே அவர் உயிரிழந்தார்.

சிறு குழந்தைகள் மர்மக் காய்ச்சலால் அடுத்தடுத்து மரணமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிரிச்சியை ஏற்படுத்தியுள்ளது.