விபத்தில் பலியான... மரியம்பிச்சை
விபத்தில் பலியான… மரியம்பிச்சை

மீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திருப்பரங்குன்றம் தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக போட்டியிட்டு வென்ற சீனிவேலு, இன்று காலை மாரடைப்பால் மறைந்தார். இதே  போல, கடந்த  2011ம் ஆண்டு சட்டசபைத் தேர்தலில்  திருச்சி மேற்கு தொகுதியில் அ.தி.மு.க. சார்பாக வென்று அமைச்சராகவும் ஆக்கப்பட்ட மரியம் பிச்சையும் சட்டமன்றத்துக்கு செல்லாமலே  கார் விபத்தில் பலியானார்.
2011ம் ஆண்டு  மே மாதம் 16-ம் தேதி   முதல்வர்  ஜெயலலிதாவுடன் 33 அமைச்சர்கள்  பதவி ஏற்றனர். இதில்  மரியம்பிச்சை, சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி ஏற்றுக் கொண்டார்.
இந்த நிலையில், திருச்சியை ஆண்ட மன்னன் பெரும்பிடுகு முத்தரையரின் பிறந்ததின விழா, அரசு சார்பில் இன்று கொண்டாடப்பட்டது.  இதையொட்டி திருச்சி ஒத்தக்கடையில் உள்ள பெரும்பிடுகு  சிலைக்கு மாலை அணிவிக்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. காலை 6.35 மணிக்கு சுற்றுச்சூழல் துறை அமைச்சர் மரியம்பிச்சை, இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் என்.ஆர்.சிவபதி இருவரும் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். பின்னர் இருவரும் தனித்தனி காரில் சென்னை புறப்பட்டனர். புதிய எம்எல்ஏக்கள் பதவி ஏற்கும் நிகழ்ச்சி,  அன்று மதியம்  சட்டசபையில் நடக்க இருந்தது.  இதில் கலந்து கொள்வதற்காக அமைச்சர்கள் சென்றனர்.
மரியம்பிச்சையின் கார் முதலில் சென்றது.   அந்த காரை சென்னை முகப்பேரை சேர்ந்த ஆனந்தன் (26) ஓட்டினார். அமைச்சர் முன் சீட்டில் அமர்ந்திருந்தார். பின் சீட்டில் திருச்சியை சேர்ந்த 4 பேர் இருந்தனர்.    பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே திருவிளக்குறிச்சி பிரிவுசாலை அருகே முன்னால் சென்ற லாரி மீது அமைச்சரின் கார் எதிர்பாராதவிதமாக மோதியது. கார் நொறுங்கியதில் அமைச்சர் மரியம்பிச்சை தலையில் அடிபட்டு அந்த இடத்திலேயே இறந்தார். டிரைவரும் மற்றவர்களும் சிறிய காயத்துடன் தப்பினார். பின்னால் வந்து கொண்டிருந்த விளையாட்டுத்துறை அமைச்சர் சிவபதி, விபத்தை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக போலீசாருக்கும் மற்ற அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவித்தார். போலீஸ் அதிகாரிகள், அதிமுக நிர்வாகிகள் அங்கு வந்தனர்.
அமைச்சர் மரியம்பிச்சையின் உடல், திருச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது. அதிமுகவினரும் அதிகாரிகளும் அவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.
சீனிவேலு
சீனிவேலு

மரியம்பிச்சை போலவே, தற்போது சீனிவேலுவும் சட்டசபைக்கு போகாமலேயே மரணமடைந்திருக்கிறார்.