Random image

நீண்ட இடைவேளைக்கு பின் கம்யூனிஸ்ட் நிகழ்ச்சியில் மன்மோகன் சிங் பங்கேற்கிறார்

டில்லி:

நீண்ட இடைவேளைக்கு பிறகு கம்யூனிஸ்ட் கட்சி நிகழ்ச்சியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்

முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் இந்தியா-அமெரிக்கா இடையிலான அணு ஆயுத ஒப்பந்தம் ஏற்பட்டதை தொடர்ந்து கம்யூனிஸ்ட் கட்சியினர் மற்றும் முன்னாள் பிரதமர் மன் மோகன் சிங் இடையிலான அரசியல் உறவில் முறிவு ஏற்பட்டது.

இந்நிலையில் வரும் 25ம் தேதி ஏபி பரதன் நினைவு சொற்பொழிவு டில்லில் நடக்கிறது. இதில் கலந்துகொண்டு உரையாற்ற மன்மோகன் சிங்குக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அழைப்பு விடுத்துள்ளது.

இது குறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் சுதாகர் ரெட்டி கூறுகையில்,‘‘ஆம், எங்களது அழைப்பை மன்மோகன் சிங் ஏற்றுக் கொண்டுள்ளார்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ‘‘மதசார்பின்மை மற்றும் அரசியலமைப்பை பாதுகாப்பதற்கான தேவைகள்’’ என்ற தலைப்பில் அவர் உரையாற்றுகிறார். காங்கிரஸ் மூத்த தலைவர்கள், கம்யூனிஸ்ட் தலைவர்கள் மற்றும் எதிர்கட்சி தலைவர்கள் இதில் கலந்துகொள்கின்றனர். மேலும், இந்த நிகழ்ச்சி மோடி அரசுக்கு எதிராக எதிர்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் அமைந்துள்ளது என்று அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

முதலாவது ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சிக்கு பின்னர் முதன்முறையாக மன்மோகன் சிங் கம்யூனிஸ்ட் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.