கொரோனா சேவையில் காரையே வீடாக்கிய மருத்துவர்…

போபால்

இந்தியாவில் 5000 ற்கும் மேற்பட்டோரிடம் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இரவு பகல் பாராது மருத்துவர்கள் சேவையாற்றி பலருக்கு மறுவாழ்வை மீட்டுத் தருகின்றனர்.

மத்தியப்பிரதேச மாநிலத்தில் உள்ள ஜே.பி மருத்துவ மனையின் மருத்துவர் ஒருவர் வீட்டிற்கு செல்லாமல் காரையே வீடாக்கிக் கொண்டு கொரோனாத் தொற்றாளர்களுக்கு சேவையாற்றி வருகிறார்.

டாக்டர் சச்சின் நாயக் இடையறாமல் மருத்துவ மனையின் கொரோனா ஐசோலேசன் பிரிவில் சிகிச்சை அளித்து வருகிறார். மேலும் வீட்டிற்கு செல்லாமல் காரையே வீடாக்கிக் கொண்டு தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்த டாக்டர் சச்சின் நாயக், “தற்போது மத்திய பிரதேசத்தில் கொரோனாத் தொற்று அதிகம் உறுதி செய்யப்பட்டு வருகிறது. எனவே தொடர்ந்து மருத்துவமனையில் சிகிச்சை அளித்து வருகிறோம்.

வீட்டிற்கு சென்றால் மனைவி மற்றும் குழந்தைக்கு தொற்று ஏற்படும் எனும் அச்சம் காரணமாக நான் வீட்டிற்கு செல்லாமல் காரிலேயே என்னைத் தனிமைப் படுத்திக் கொண்டுள்ளேன்.

காரில் ஓய்வு நேரத்தில் புத்தகம் படிப்பதுக் கொண்டு, வீடியோ கால் வழியாக குடும்பத்தினருடன் பேசிக்கொள்வேன்” என்றார்.

இவர் போன்ற மருத்துவர்களின் அயராத உழைப்பாலும் சேவையாலும் சிகிச்சை பெறுவோர் நம்பிக்கையுடன் உள்ளனர்.