அமித்ஷா வழக்கை விசாரித்த சிபிஐ நீதிபதி மர்ம மரணம்!! குடும்பத்தினரின் அதிர்ச்சி தகவல்கள்

மும்பை:

2005ம் ஆண்டு குஜராத்தில் சோஹ்ராபுதீன் ஷேக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 2010ம் ஆண்டு ஜூலை மாதம் அமித்ஷாவை சிபிஐ கைது செய்தது. இந்த வழக்கு விசாரணை குஜராத்துக்கு வெளியே நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையின் அடிப்படையில் மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் விசாரணை நடத்த உச்சநீதிமன்றம் 2012ம் ஆண்டு உத்தரவிட்டது.

இந்த வழக்கில் இருந்து அமித்ஷா 2014ம் ஆண்டு டிசம்பர் மாதம் மும்பை சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் இருந்து விடுவிக்கப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த வந்த மும்பை சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரிஜிகோபால் ஹரிகிஷன் லாயா என்பவர் மர்மமான முறையில் இறந்தார். இவரது மரணத்தில் புதைந்துள்ள மர்மங்களை வெளிக் கொண்டு வகையில் இத்தனை நாட்கள் அமைதியாக இருந்த அவரது குடும்பத்தினர் இப்போது மவுனம் கலைத்து பேச தொடங்கியுள்ளனர்.

இது குறித்து ‘‘தி கேரவன்’’ என்ற அரசியல் மற்றும் கலாச்சார இணையதள செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த கட்டுரையை நிரஞ்சன் தாக்லே என்ற பத்திரிக்கையாளர் எழுதியுள்ளார்.

அதன் விபரம்…..

2014ம் ஆண்டு டிசம்பர் 1ம் தேதி மும்பை சிபிஐ சிறப்பு நீதிபதியான பிரிஜிகோபால் ஹரிகிஷன் லாயா என்பவர் நாக்பூரில் நடந்த சக நீதிபதியின் மகள் திருமண நிகழ்ச்சியில் கலந்துகொண்ட சென்றார். அங்கு அவர் இறந்துவிட்டதாக அவரது குடும்பத்தினருக்கு தகவல் கிடைத்துள்ளது. 48 வயதான பிரிஜிகோபால் நாட்டின் முக்கிய நபரில் வழக்கை விசாரித்து வந்தார்.

அது 2005ம் ஆண்டு குஜராத்தில் நடந்த சோஹ்ராபுதீன் ஷேக் கொலை வழக்கு. இதில் முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தவர் அப்போதைய குஜராத் உள்துறை அமைச்சர் அமித்ஷா. தற்போது நீதிபதி லாயா மரணமடைந்தபோது அவர் பாஜக தேசிய செயலாளராக அமித்ஷா உள்ளார். நீதிபதியின் மரணத்துக்கு மாரடைப்பு தான் காரணம் என்று மீடியாக்களில் செய்தி வெளியானது.

அவரது மரணத்துக்கு பின்னர் லாயா குடும்பத்தினர் மீடியாக்களிடம் பேசவில்லை. ஆனால், 2016ம் ஆண்டு நவம்பர் நீதிபதி லாயாவின் மருமகள் நுபூர் பாலபிரசாத் பியானி இந்த கட்டுரையாளரை புனேயில் தொடர்பு கொண்டு தனது மாமாவின் மரணத்தின் போது இருந்த சூழ்நிலையை விவரித்தார். இதை தொடர்ந்து 2016ம் ஆண்டு நவம்பர் முதல் 2017ம் ஆண்டு நவம்பர் வரை பல முறை அவர்களது குடும்பத்தினரை கட்டுரையாளர் பல முறை சந்தித்து பேசியுள்ளார்.

மறைந்த நீதிபதியின் சகோதரியும், நுபூரின் தாயாருமான அனுராதா பியானி என்பவர் அரசு மருத்துவராக பணியாற்றி வருகிறார். மற்றொரு சகோதரி சரிதா மந்தானே. தந்தை ஹர்கிஷன் ஆகியோரிடம் தொடர்பில் இருந்தார். மேலும், நீதிபதி பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மருத்துவ குழுவினர், ஊழியர்கள் மற்றும் நீதிபதியில் உடலை கையாண்டவர்களிடம் ரகசிய விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

இதன் மூலம் நீதிபதியின் மரணத்தில் பல சந்தேகங்கள் எழ தொடங்கியது. மரணத்திற்கு பின் மேற்கொள்ளப்பட்ட நடைமுறைகள், குடும்பத்தாரிடம் நீதிபதியின் உடல் ஒப்படைக்கப்பட்டபோது இருந்த நிலை ஆகியவை தொடர்பாக பல கேள்விகள் எழுந்தது. நீதிபதி மரணம் தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்ற அவரது குடும்பத்தாரின் கோரிக்கையை நிறைவேற்ற இது வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

2014ம் ஆண்டு நவம்பர் 30ம் தேதி இரவு நாக்பூரில் இருந்து மனைவி சர்மிளாவுடன் மொபைல் போனில் சுமார் 40 நிமிடங்கள் வரை நீதிபதி பேசியுள்ளார். அந்த நாள் முழுவதும் பல திட்டங்களுடன் பரபரப்பாக பணியாற்றியதாக அவர் தெரிவித்துள்ளார். சக நீதிபதியான சப்னா ஜோஷியின் மகள் திருமணத்தில் கலந்தகொள்ள நாக்பூர் சென்றிருந்தார்.

இந்த திருமணத்தில் கலந்துகொள்ள லாயா முதலில் ஆர்வம் இல்லாமல் இருந்துள்ளார். ஆனால், அவருடன் பணியாற்றும் மற்ற இரண்டு நீதிபதிகள் வற்புறுத்தலின் பேரில் இதில் கலந்துகொள்ள சென்றுள்ளார். திருமணத்தை தொடர்ந்து வரவேற்பு நிகழ்ச்சியிலும் தான் கலந்தகொண்டதாக லாயா தனது மனைவியிடம் தெரிவித்துள்ளார்.

தனது மகன் அனுஜ் குறித்து மனைவியிடம் விசாரித்துள்ளார். நாக்பூர் சிவில் லைன்ஸ் பகுதியில் சக நீதிபதிகளுடன் அரசு விஐபி விருந்தினர் மாளிகையான ரவிபவனில் தங்கியிருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இது தான் அவரது கடைசி அழைப்பாகவும், குடும்பத்தினருடனான உரையாடலாகவும் இருந்துள்ளது. அதன் பின்னர் மறுநாள் காலை அவர் இறந்துவிட்ட செய்தி தான் குடும்பத்தினரிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது அவரது மனைவி மும்பையிலும், மகள்கள் துலே, ஜால்கோன் ஆகியோர் அவுரங்காபாத்திலும் இருந்துள்ளனர். லதூர் நகரம் அருகே உள்ள இவர்களின் சொந்த கிராமமான கேட்கானில் வசிக்கும் லாயாவின் தந்தை ஹரிகிஷன் கூறுகையில், ‘‘எனக்கு லாயா இறந்துவிட்டதாக இரவு தகவல் வந்தது. பிரேத பரிசோதனை முடிந்த பின்னர் கிராமத்தில் உள்ள எங்களது மூதாதையர் வீட்டுக் கொண்டு வரப்பட்டது. லாயாவின் மரணம் எனது வாழ்க்கையில் பூகம்பத்தை ஏற்படுத்தியது போல உணர்ந்தேன்’’ என்றார். மாரடைப்பு காரணமாக அவர் இறந்ததாக குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டவுடன் நாக்பூரில் உள்ள தண்டே மருத்துவமனைக்கு அவரை ஆட்டோவில் அழைத்து சென்றதாவும், அங்கு அவருக்கு சில சிகிச்சை அளித்ததாகவும் என்னிடம் தெரிவித்தனர். ஆனால் அந்த மருத்துவமனையில் இருந்த இசிஜி கருவி செயல்படவில்லை என்பது பின்னர் தெரியவந்தது. அதன் பின்னர் அவரை மெடிட்ரினா மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு அவர் வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்’’ என்றார்.

மரணத்தின் போது சோஹ்ராபுதீன் வழக்கை மட்டும் தான் லாயா விசாரணை நடத்தி வந்துள்ளார். நாட்டில் பலரும் உன்னிப்பாக கவனித்து வரும் வழக்கு இது. இந்த வழக்கின் விசாரணை குஜராத் மாநிலத்திற்கு வெளியே நடைபெற வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

இதையடுத்து 2012ம் ஆண்டு இந்த வழக்கை குஜராத்தில் இருந்து மகாராஷ்டிராவுக்கு மாற்றம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கை ஆரம்பம் முதல் இறுதி வரை ஒரே நீதிபதி தான் விசாரிக்க
வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது. ஆனால் முதலில் இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிபதி ஜே.டி. உத்பட் 2014ம் ஆண்டு மத்தியில் மாற்றப்பட்டு லாயா நியமனம் செய்யப்பட்டார்.

இந்த வழக்கு விசாரணையின் போது நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக விளக்கு கோரி நீதிபதி உத்பட் முன்னிலையில் அமித்ஷா சார்பில் அவரது வக்கீல் 2014ம் ஆண்டு ஜூன் 6ம் தேதி மனு தாக்கல் செய்தார். அதேமாதம் 20ம் தேதி அமித்ஷா நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகவில்லை. இதனால் வழக்கு விசாரணையை ஜூன் 26ம் தேதிக்கு நீதிபதி உத்பட் ஒத்திவைத்தார். ஆனால் 25ம் தேதியே உத்பட் இடமாற்றம் செய்யப்பட்டார்.

லாயா நியமனத்திற்கு பின்னர் அக்டோபர் 31ம் தேதி அன்று நேரில் ஆஜராவதில் இருந்து அமித்ஷாவுக்கு விலக்கு அளிக்கப்பட்டது. எனினும் ஒரு வாய்தாவின் போது மும்பையில் இருந்தபோதும் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. உள்ளூரில் இருக்கும் போது நேரில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவில் இருந்ததை நீதிபதி சுட்டிக்காட்டி வழக்கு விசாரணையை டிசம்பர் 15ம் தேதிக்கு ஒத்திவைத்தார்.

இந்த நிலையில் தான் டிசம்பர் 1ம் தேதி லாயா மரணமடைந்துள்ளார். அவரது மரண செய்தி வழக்கமான செய்தியாகவே மீடியாக்களில் வெளியானது. இந்த மரண செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில், லாயா மாரடைப்பால் இறந்தார் என்றும், அவர் அதற்கு முன்பே பல சிகிச்சைகளை எடுத்து வந்ததாகவும் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.

டிசம்பர் 3ம் தேதி அன்று நாடாளுமன்றத்திற்கு வெளியே திரிணமுல் காங்கிரஸ் கட்சி எம்.பி.க்கள் போராட்டம் நடத்திய பின்னரே மீடியாக்களின் கவனம் இப்பிரச்னையின் பக்கம் திரும்பியது. அப்போது குளிர்கால கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்தது. இதில் லாயா மரணம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று கோரிக்கை எழுப்பப்பட்டது. இதற்கு மறுநாள் சோஹ்ராபுதீன் சகோதரர் ரூபாபுதின் நீதிபதி லாயாவின் மரணம் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியிருப்பதாக சிபிஐ.க்கு கடிதம் எழுதினார்.

மறைந்த நீதிபதி லாயா டைரி எழுதும் பழக்கம் கொண்டவர். அதில், தனக்கு ஏற்பட்ட இடையூறுகள் குறித்து குறிப்பிட்டிருந்தார். இது குறித்து அவரது மனைவி, மகள்கள் பதில் கூற மறுத்துவிட்டனர். அவர்களது உயிருக்கு இருந்த அச்சுறுத்தல் காரணமாக அவர்கள் தொடர்ந்து பேச மறுத்து வந்தனர். லாயா மரணம் குறித்து தகவல் தெரிவித்தவர் நீதிபதி பார்டே. இவர் தான் லாயா மரணமடைந்ததை தொடர்ந்து அவரது உடல் பிரேத பரிசோதனை செய்யப்பட்ட தகவலையும் தெரிவித்துள்ளார்.

அவரது இறப்புக்கு மாரடைப்பு தான் காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார். உடலை சொந்த ஊருக்கு கொண்டு செல்ல ஆர்எஸ்எஸ் பிரமுகர் ஐஸ்வர் பகேதி என்பவர் உதவுவதாக தெரிவித்துள்ளார். இவர்களுக்கு எல்லாம் எப்படி மரண செய்தி தெரியும். நாங்கள் இந்த மருத்துவமனையில் இருப்பதை அவருக்கு யார் சொன்னது என்பது புரியாத புதிராக இருந்தது என்று லாயாவின் சகோதரி பியானி தெரிவித்துள்ளார்.

அவுரங்காபாத்தில் உள்ள மற்றொரு சகோதரியான சரிதா மந்தனேவுக்கும் நீதிபதி பார்டே தான் அதிகாலை 5 மணிக்கு இந்த தகவலை தெரிவித்துள்ளார். பார்டேவும் லாயாவுடன் நாக்பூர் திருமணத்திற்கு சென்றதாக தெரிவித்துள்ளார். ஆனால், அவர் லாயாவுடன் செல்லவில்லை என்பது பின்னர் தெரியவந்துள்ளது. இரவு 11.30 மணிக்கு உடல் சொந்த கிராமத்தில் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

லாயாவின் மனைவி, மகள்களை சில நீதிபதிகள் கேட்கானுக்கு அழைத்து சென்றுள்ளனர். அப்போது இது குறித்து யாரிடமும் பேச வேண்டாம் என்று ஒரு நீதிபதி மட்டும் தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டே சென்றுள்ளார். லாயா உடலின் கழுத்து பகுதியில் ரத்தம் இருந்துள்ளது. தலையிலும் ரத்தம், காயம் இருந்துள்ளது. சட்டை முழுவதும் ரத்தமாகியிருந்தது.

ஆனால் நாக்பூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையின் கைகளால் எழுதப்பட்ட பிரேத பரிசோதனை அறிக்கையில் ஆடைகள் தண்ணீரில் நனைந்து, ரத்தம் அல்லது வாந்தியால் ஈரமாகியிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. பிரேத பரிசோதனையின் போது ரத்தம் வர வாய்ப்பு கிடையாது. அதனால் இரண்டாவது முறை பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.

ஆனால் அங்கு கூடியிருந்த லாயாவின் நண்பர்களும், சக நீதிபதிகளும் குடும்பத்தினரின் வாயை அடைத்துவிட்டனர். இந்த பிரச்னையை பெரிதுபடுத்த வேண்டாம் என்று தெரிவித்துவிட்டனர். இறுதி சடங்கை விரைந்து நடத்தவும் குடும்பத்தினர் கட்டாயப்படுதப்பட்டுள்ளனர்.

லாயாவின் மரணம் சந்தேகத்திற்குறிய வகையில் தான் உள்ளது என்று சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். பிரேத பரிசோதனையில் எந்தவிதமான நடைமுறைகளும் பின்பற்றப்படவில்லை என்பது தெரியவந்துள்ளது. லாயாவின் மொபைல் போனையும் போலீசாருக்கு பதிலாக ஐஸ்வர் பகேதி தான் 4 நாட்கள் கழித்து குடும்பத்தாரிடம் ஒப்படைத்துள்ன்£ர். அதில் இருந்த அனைத்து எஸ்எம்எஸ் தகவல்களும் அழிக்கப்பட்டுள்ளது.

மேலும், லாயா தங்கியிருந்த ரவிபவன் அருகே ஆட்டோ ஸ்டாண்டு இல்லை. பகல் நேரத்திலேயே அந்த பகுதி மக்களுக்கு ஆட்டோ கிடைக்காது. இந்நிலையில் அவரை இரவு நேரத்தில் எப்படி ஆட்டோவில் அழைத்துச் சென்றார்கள் என்பது தெரியவில்லை. மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றபோது ஏன் குடும்பத்தினருக்கு தகவல் தெரிவிக்கவில்லை. பிரேத பரிசோதனைக்கு ஏன் குடும்பத்தாரிடம் அனுமதி பெறவில்லை. இதற்கு யார் பரிந்துரை செய்தது.

தாண்டே மருத்துவமனையில் என்ன சிகிச்சை அளிக்கப்பட்டது?. சிகிச்சை விபரங்கள் குடும்பத்தாரிடம் தெரிவிக்கவில்லை. அந்த சமயத்தில் மகாராஷ்டிரா மாநில சட்டமன்ற குளிர்கால கூட்டம் நாக்பூரில் தொடங்கியது. அதனால் பல விஐபி.க்கள் அங்கு வந்திருந்தனர். இவர்களில் ரவி பவனில் தங்கியிருந்த மற்ற விஐபி.க்களின் விபரங்கள் தெரியவில்லை. இத போன்று பல கேள்விகள் உள்ளது. இதற்கு பதில் கிடைத்தால் சிலருக்கு பிரச்னை ஏற்படும் என்று வக்கீல் சரோதே தெரிவித்துள்ளார்.

நாக்பூருக்கு லாயாவுடன் சென்ற நீதிபதிகளில் ஒருவர் கூட ஆறு மாதம் வரை இந்த குடும்பத்தினரை சந்திக்கவில்லை. அவர்களுக்கு தான் கடைசி நேரத்தில் என்ன நடந்தது என்பது தெரியவரும். பிரேத பரிசோதனை அறிக்கையில் உறவினர் என்ற இடத்தில் ஒருவர் கையெழுத்திட்டுள்ளார். அப்படி ஒரு உறவினர் எங்களுக்கு நாக்பூரில் கிடையாது என்று குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.

அறிக்கையில் காலை 6.15 மணிக்கு உயிர் பிரிந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆனால் குடும்பத்தினருக்கு மரணம் குறித்த தகவல் காலை 5 மணி முதலே வர தொடங்கியுள்ளது. பிரேத பரிசோதனை செய்தது போல உடலை வெட்டி தையல் போடுமாறு உயர் அதிகாரிகளிடம் இருந்து உத்தரவு வந்ததாக அங்கு பணியாற்றும் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

லாயாவுக்கு மாரடைப்பு வருவதற்கான எந்தவித அறிகுறியும் கிடையாது. அவர் இது தொடர்பான எந்த சிகிச்சையும் எடுத்துக் கொள்ளவில்லை. அவருக்கு மது, புகை போன்று எந்த பழக்கமும் கிடையாது. குடும்பத்தினர் யாருக்கும் மாரடைப்பு ஏற்பட்டது கிடையாது. அவரது பெற்றோர் தற்போது 80, 85 வயதில் நன்றாக உள்ளனர்.

அதனால் பரம்பரை நோய்க்கும் வாய்ப்பு இல்லை. பல ஆண்டுகளாக தினமும் 2 மணி நேரம் டேபிள் டென்னிஸ் விளையாடி வந்துள்ளார். லாயாவின் சகோதரியும் ஒரு மருத்துவர் என்பதால், அவரிடம் லாயா தொடர்ந்து ஆலோசனை பெற்று வந்துள்ளார்.

 

http://www.caravanmagazine.in/vantage/shocking-details-emerge-in-death-of-judge-presiding-over-sohrabuddin-trial-family-breaks-silence