கிருஷ்ணகிரி அருகே காவல்நிலையம் முன்பு 16 பேர் கொண்ட குடும்பமே தீக்குளிக்க முயற்சி! பரபரப்பு

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி அருகே உள்ள  காவல்நிலையத்தில், நிலம் தொடர்பான புகாரின் பேரில் 16 பேர் கொண்ட குடும்பம் தீக்குளிக்க முயற்சி செய்தது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள போச்சப்பள்ளி என்னும் கிராமம். இந்த பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் தனது அண்ணன் தம்பிகளுடன் கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார். முருகேசனுக்குச் சொந்தமான 3 சென்ட் நிலத்தை அவரது பக்கத்து வீட்டில் வசிக்கும் அருணாச்சலம், கேசவன் என்ற இரண்டு பேர் ஆக்கிரமித்து, உள்ளனர்.

இதுகுறித்து, அருகில் உள்ள மாத்தூர் காவல்நிலையித்தில் முருகேசன் தரப்பில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால், காவல்துறையினர் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையில், நேற்று மீண்டும்  அருணாச்சலமும், கேசவனும் அந்த ஆக்கிரமித்த நிலத்தில் கட்டிடம் கட்டு வதற்கான முயற்சியில் ஈடுபட்டனர். இதனால் முருகேசன் மீண்டும் காவல்நிலையத்தில் புகார் கூறினார்.

ஆனால், இதற்கும் காவல்துறையினர் எந்தவித நடவடிக்கையும் எடுக்காத நிலையில்,  ஆத்திரமடைந்த முருகேசன், இன்று காலை குடும்பத்தில் உள்ள அனைவரையும் கையில் மண்எண்ணை கேனோடு, காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளார்.  காவல்நிலையம் வாசலில், அனைவர் மீதும் மண்ணெண்ணெய் ஊற்றி விட்டு  தீ பற்ற வைக்க முயற்சி செய்துள்ளார்.

நிலைமை தீவிரமடைந்ததை கண்ட காவல்துறையினர் ஓடிவந்து, அனைவர் மீதும், தண்ணீரை ஊற்றி காப்பாற்றினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்த முருகேசன் புகார் மீது நடவடிக்கை எடுப்பதாக காவல்துறையினர் உறுதி அளித்துள்ளனர்.