பசு மாடுக்கு வளைகாப்பு நடத்தி அசத்திய விவசாயி!!

கோவை:

கோவையில் இயற்கை விவசாயி 19 வகை சீர் வரிசைகளுடன் பசு மாட்டுக்கு வளைகாப்பு நடத்தி 50 பேரு க்கு விருந்து கொடுத்து அசத்தியுள்ளார்.

கோவை மாவட்டம் தொண்டாமுத்தூரை அடுத்த தாளியூரை சேர்ந்தவர் கிஷோர் குமார். இயற்கை விவசாயியான இவர் தீனம்பாளையம் தோட்டத்தில் மாடுகளை வளர்த்து வருகிறார். இதில் துர்கா என்ற காங்கேயம் பசு ஒன்று சினையாகி உள்ளது.

இதையடுத்து அந்த மாட்டுக்கு கிஷோர் குமார் வளைகாப்பு நடத்தினார். தோட்டத்தில் சாமியானா பந்தல் அமைத்து வளைகாப்பு விழா நடத்தினார். இதில் அனைத்து மாடுகளையும் கலந்துகொள்ள செய்தார். பின்னர் துர்கா மாட்டுக்கு பொட்டு வைத்து 19 வகையான சீர்வரிசை வைக்கப்பட்டது.

மாட்டின் கொம்புகளில் வளையல் அணிவிக்கப்பட்டது. கால்களிலும் கொலுசு அணிவித்து, உடம்புக்கு பட் டுத்துணி போர்த்தப்பட்டது. தொடர்ந்து மாட்டுக்கு அகத்திக்கீரை, மைசூர் பாகு, வாழைப்பழம் ஆகியவை வழங்கப்பட்டது. விழாவில் இயற்றை விவசாயிகள் 50 பேர் கலந்துகொண்டனர். அவர்களுக்கு 5 வகையான உணவுகளுடன் விருந்து அளிக்கப்பட்டது.

இது குறித்து கிஷோர் குமார் கூறுகையில், ‘‘ இயற்கை விவசாயத்தில் எனக்கு அதிக ஆர்வம். கடந்த 10 வருடங்களாக நாட்டு மாடுகளை வளர்த்து வருகிறேன். தற்போது காங்கேயம், தஞ்சாவூர் குட்டை, கிர் இன மாடுகளை வளர்த்து வருகிறேன். அதில் ஒரு காங்கேயம் இன பசுவுக்கு துர்கா என பெயர் சூட்டியிருந்தோம்.

எனக்கு மகள் பிறப்பதற்கு 15 நாட்களுக்கு முன்பாக தான் இந்த மாடும் பிறந்தது. இதனால் துர்காவை எங்கள் வீட்டில் ஒருவராக நினைத்து வளர்த்த வருகிறோம். துர்கா சினையாகி 9 மாதம் ஆகியுள்ளது. இதனால் வளைகாப்பு நடத்தினோம். இது மகிழ்ச்சியாக இருக்கிறது’’ என்றார்.