மர்நாத்

சுமார் 16 மணி நேர பயணமான அமர்நாத் யாத்திரை பாதையில் கழிப்பறை வசதிகளே இல்லை என அங்கு பயணம் செய்த பெண் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

அமர்நாத் யாத்திரையை மேற்கொண்ட பெண் செய்தியாளர் ஒருவர் தனது பயணத்தைப் பற்றி கூறியதாவது :

“சுத்தமான இந்தியா (ஸ்வச் பாரத்) என்னும் முழக்கம் நாடெங்கும் ஒலிக்கிறது.  அதை விளம்பரம் செய்யாத ஊடகங்களே இல்லை எனலாம்.  ஆனால் நாட்டின் உண்மையான நிலை என்ன?  16 மணி நேரப் பயணமான ஜம்மு காஷ்மீரிலிருந்து அமர்நாத் செல்லும் பாதையில் கழிப்பறை இல்லாமல் சாலை ஓரமே கழிப்பறை ஆகும் அவலம் நிகழ்கிறது.

சமீபத்தில் நிகழ்ந்த துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் அமர்நாத் பாதையில்  பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.    இந்த பாதையில் தற்போது தினமும் 150 வாகனங்களில், சுமார் 3000 யாத்திரிகர்கள் பயணம் செய்கின்றனர்.  ஆனால் இந்த பாதையில் எங்குமே கழிப்பறைகள் என்பது காணப்படவே இல்லை.   ஆண்கள் மலைப்பாதை ஓரத்தை கழிப்பறை ஆக்கிவிடுகின்றனர்.  ஆனால் பெண்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக உள்ளது.

நாங்கள் சென்ற யாத்திரை வாகனம் விடியற்காலை 3 மணிக்கு, ஜம்மு யாத்ரி நிவாஸிலிருந்து கிளம்பியது.  பானிஹால் தான் முதல் நிறுத்தம்.  அந்த நிறுத்தத்தை நாங்கள் காலை 10 மணிக்கு அடைந்தோம்.  அங்கு வந்தவுடன், அனைத்து வாகனங்களிலும் இருந்த ஆண்கள் வேகமாக மலைப்பாதை ஓரம் சென்று சிறுநீர் கழிக்க ஆரம்பித்தனர்.  இதுவரை 216555 பேர் அமர்நாத் யாத்திரை சென்றதாக ஒரு கணக்கெடுப்பு கூறுகின்றது.  அதில் பாதி ஆண்கள் என வைத்துக் கொண்டால், அந்த இடத்தில்……..  நினைத்துப் பார்க்கவே முடியவில்லை.

நான் மெதுவாக அக்கம் பக்கம் உள்ள பெண்களிடம் இது பற்றி விசாரித்ததும், தூரத்தில் ஒரு மறைவிடம் உள்ளதாக சொன்னார்கள்.  அந்தப் பக்கம் பார்த்தால் அங்கும் ஆண்களே வரிசையாக நின்றபடி சிறுநீர் கழித்தபடி இருந்தார்கள்.  லேசான மழை காரணமாக பெண்கள் யாரும் இன்னும் கீழே இறங்கி வேறெதுவும் மறைவிடம் இருக்கிறதா என கண்டறிய முடியவில்லை.  நான் அமைதியாக இவைகளை குறிப்பெடுக்க ஆரம்பித்தேன்.

அங்கு உணவுக்கடை வைத்திருந்த ஒருவர் நான் குறிப்பெடுப்பதைக் கண்டு, “மேடம், ஏதாவது செய்யுங்கள்.  நாங்கள் இங்கே உணவுக்கடைகள் வைத்துள்ளோம்,  அது தெரிந்தும் இந்த ஆண்கள் இப்படிச் செய்கிறார்கள்.  எப்படியாவது இதை தடுத்து நிறுத்துங்கள்’ என கேட்டுக்க் கொண்டார்.

மேலும், அவர்கள் மணலில் தார்பாய்கள் விரித்து உணவகத்தரையை அமைத்துள்ளதாகவும்,  சில மணி நேரங்களிலேயே அந்த தார்பாய்கள் நனைந்து நாற்றமெடுத்து உபயோகப்படுத்த முடியாமல் போய் விடுவதாகவும் கூறினார்.

பிறகு நாங்கள் சென்ற அனைத்து இடங்களிலும் வழியில் ஒரு கழிப்பறையும் கிடையாது.  ஒவ்வொரு நிறுத்தத்திலும் இதே கதைதான் திரும்ப திரும்ப நிகழ்ந்தது.  நான் வழியெங்கும் ஒரு சொட்டு நீர் கூட பருகாமல் பயணம் செய்தும் எனக்கும் சிறுநீர் கழிக்க வேண்டி இருந்தது.

அடுத்த நிறுத்தம் வந்ததும் ஒரு உணவகம் சென்று கழிப்பறை பற்றி கேட்டபோது அந்த உணவகத்தின் கழிப்பறை வேலை செய்யவில்லை என பதில் வந்தது.   பக்கத்தில் இருந்த ஒரு தனியார் அலுவலகத்தின் உள்ளே தைரியமாக சென்று எனது நிலைமையை ஒரு பெண்ணிடம் சொன்னேன்.  அவர் என் முகத்தை பார்த்து புரிந்துக் கொண்டு உடனடியாக அந்த அலுவலகத்தின் கழிப்பறையை உபயோகிக்கச் சொன்னார்.  நிம்மதி வந்தது.

இதைப் போன்ற பதிவை ஒரு பெண் பதியலாமா என பலரும் கேட்கக் கூடும்.  ஆனால் என்னைப் போன்ற பெண் யாத்திரிகர்கள் படும் அவஸ்தை வெளியுலகுக்கு தெரிய நான் இந்த நீண்ட பதிவை பதிகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

“சுவச் பாரத்” என்று முழங்கும் மத்திய அரசுதான் கவனிக்க வேண்டும்!