தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி மக்களை மிரட்டும் ஆதித்யநாத் அரசு: முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி குற்றச்சாட்டு

--

சாதிய வன்முறைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தை ஏவி, யோகி ஆதித்யநாத் தலைமையிலான பாஜக அரசு மிரட்டல் விடுப்பதாக முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி எஸ்.ஆர். தாராபுரி தெரிவித்துள்ளார்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக உத்தரப்பிரதேசத்தில் போராட்டத்தில் ஈடுபட்ட சமூகச் செயற்பாட்டாளர் சதாப் ஜாஃபர்  முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரி தாராபுரி இருவரும் கடந்த மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். தற்போது இருவரும் ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். முன்னாள் ஐ.பி.எஸ் அதிகாரியான தாராபுரியை முதலில் வீட்டுக்காவலில் வைத்திருந்தனர். அவர் வீதிகளில் இறங்கி போராட்டத்தை முன்னெடுக்கவில்லை `Save Democracy’ என்ற பதாகையைக் கையில் வைத்தபடி முகநூலில் ஒரு பதிவிட்டிருந்தார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார்.

சிறையில் நடந்த நிகழ்வுகளை பற்றி கூறிய எஸ்.ஆர் தாராபுரி, ”டிசம்பர் 20-ம் தேதி காலை 11 மணிக்கு வீட்டிலிருந்து காவலர்கள் என்னை அழைத்துச் சென்றனர். பகல்முழுவதும் காஸிப்பூர் காவல்நிலையத்தில் வைக்கப்பட்டிருந்தேன். மாலையில் ஹஸ்ரத்கானி காவல்நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டேன். என்னை 7 மணிக்குக் கைது செய்ததைப் போல் காட்டினர். எனக்கு சாப்பிட எதுவும் வழங்கவில்லை. இரவில் எனக்குப் போர்வை போன்ற எதுவும் வழங்கவில்லை. அதிக குளிராக இருந்ததால் காவலர்களிடம் போர்வை கேட்டேன். ஆனால், அவர்கள் எனக்கு போர்வை மற்றும் உணவுகளை வழங்க மறுத்துவிட்டனர்” என்று தெரிவித்தார்.

அத்தோடு, “ஆதித்யநாத் ஆட்சிக்கு வந்ததிலிருந்தே, வகுப்புவாத அல்லது சாதி அடிப்படையிலான மோதல் நடந்த போதெல்லாம் பாதிக்கப்பட்டவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் மூலம் காவல்துறையை வைத்து மிரட்டி வருகிறது. ஷபிர்பூர் வழக்கில், சந்திரசேகர் ஆசாத் உட்பட மூன்று தலித் ஆண்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர், அதே நேரத்தில் ராஜபுத்திரர்கள் இலவசமாக சுற்றித் திரிகிறார்கள் என்பதே அதற்கு மிக தெளிவான சான்று” என்றும் அவர் விமர்சித்துள்ளார்.

மேலும், உத்திர பிரதேசத்தில் பல தலித்துகள், குறிப்பாக கலவரம் நடந்த ஷபீர்பூரில், பாஜகவுக்கு பலர் வாக்களித்தனர். ஆனால் ஆசாத் அவர்கள் அரசியல் பாசாங்குத்தனத்தை சுட்டிக்காட்டியதால், ஏராளமான வாக்காளர்கள் ஏமாற்றமடைந்தனர். இப்போது ஆசாத் கைது செய்யப்பட்ட நிலையில், அதிகமான மக்கள் பாஜகவில் இருந்து விடுபட ஆர்வமாக உள்ளனர். யோகி அரசால் தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் குறைந்தது 200 முதல் 300 பேர் வரை கைது செய்து, சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் பெரும்பாலானவர்கள் முஸ்லீம்கள், தலித்கள், ஓ.பி.சிக்கள் மற்றும் அரசியல் எதிரிகளாக இருக்கின்றனர்” என்றும் அவர் தெரிவித்தார்.