சென்னை:

சென்னையை சேர்ந்தவர் பிரசன்ன கோபிநாத் (வயது 34). இவர் கடந்த 2005ம் ஆண்டு பிரிட்டனில் தங்கியிருந்து படித்தார். இவரது மனைவி நிர்மிதி. இவர்களது பக்கத்து வீட்டில் பூஜா என்பவரும் அவரது கணவர் அனுராக் ஆகியோர் வசித்து வந்தனர்.

இவர்கள் அனைவருமே இந்தியர்கள். படிப்பு முடித்துவிட்டு இரு குடும்த்தினரும் இந்தியா திரும்பி வெவ்வேறு நகரங்களில் குடியேறிவிட்டனர். இதன் பின்னர் இரு குடும்பத்தினரும் கடந்த 12 ஆண்டுகளாக சந்தித்துக் கொள்ளவில்லை.

இதில் தற்போது 44 வயதாகும் பூஜா ஆசிரியராக உள்ளார். இவர் தற்போது கல்லீரல் பாதிப்பு நோய்க்கு ஆளானார். இவருக்கு கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துவிட்டனர். இதனால் கல்லீரல் தானமாக பெற அவரது கணவர் அனுராக் பல இடங்களில் தேடி அலைந்தார். இறுதியில் பேஸ்புக்கில் இந்த தகவலை வெளியிட்டார்.

அப்போது இதை பிரசன்னா பார்த்துள்ளார். பிரசன்னா கூறுகையில்,‘‘ நாங்கள் இந்த பதிவை பேஸ்புக்கில் பார்த்தவுடன் எனது மனைவியும், நானும் அனுராகை தொடர்பு கொண்டோம். அடுத்த நொடியே அவருக்கு உதவி செய்ய வேண்டும் என்று முடிவு செய்தோம்’’ என்று பிரசன்னா ‘‘நியூஸ் மினிட்’’ செய்தி நிறுவனத்திடம் தெரிவித்தார்.

முதலில் நிர்மிதி தான் கல்லீரல் தானம் செய்ய முன் வந்தார். ஆனால், பரிசோதனையில் அவரால் தானம் கொடுக்க முடியாது என்று வந்துவிட்டது. இது குறித்து நிர்மிதி கூறுகையில்,‘‘ பெரும்பாலான இந்தியர்கள் வீக்கம் நிறைந்த கல்லீரல் பிரச்னையில் உள்ளனர். இதே காரணத்தால் என்னால் உதவி செய்ய முடியாமல் போனது. இதை தெரிந்தவுடன், பிரசன்னா உடனடியாக தானம் செய்ய முன்வந்தார். அவர் அனைத்து பரிசோதனைகளிலும் தேர்ச்சி பெற்றார்’’ என்றார்.

‘‘எனினும் ரத்த உறவு, அல்லது முதல் சகோதரர் உறவு அடிப்படையில் உள்ளவர்கள் மட்டுமே கல்லீரல் தானம் செய்யமுடியும் என்ற சட்ட சிக்கல் ஏற்பட்டது. அதனால் நாங்கள் பிரிட்டனில் ஒன்றாக வாழ்ந்ததற்கான ஆவணங்கள் தயார் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுது. மேலும், மருத்துவமனை நிர்வாகம் 2 மணி நேரம் சிபிஐ போல் எங்களிடம் விசாரணை மேற்கொண்ட பின்னர் தான் அறுவை சிகிச்சை மேற்கொண்டனர்’’ என்று அனுராக் தெரிவித்தார்.

பிரசன்னா தம்பதியர் கூறுகையில், ‘‘ நாங்கள் நண்பர்கள் என்பதை தாண்டி ஒரு குடும்பம் போல் வாழ்ந்தோம். பூஜா எங்களை சகோதரர், சகோரரின் மனைவி போலவே பழகினார். கல்லீரல் தானத்திற்கான நடைமுறை சிக்கல்கள் குறித்து நான் கவலைப்படவில்லை. எங்களிடம் சிறந்த மருத்துவமனையும், தகுதிய £ன அறுவை சிகிச்சை நிபுணர்களும் உள்ளனர்’’ என்றனர்.

‘‘கடந்த மாதம் 21ம் தேதி 13 மணி நேரம் அறுவை சிகிச்சை நடந்து முடிந்தது. பிரசன்னாவும், பூஜாவும் அறுவை சிகிச்சை அறைக்குள் செல்லும் போது எனக்கு கவலையாக இருந்தது. எனினும் மருத்துவர்கள் ஆறுதல் கூறினர்’’ என்று நிர்மிதி தெரிவித்தார்.

பிரசன்னா தற்போது மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பிவிட்டார். பூஜா தொடர்ந்து மருத்துவமனை பொது வார்டில் மருத்துவர்கள் கண்காணிப்பில் இருந்து வருகிறார். நோய் தொற்று எதுவும் ஏற்படாமல் இரு க்க அவரை 1 அல்லது 2 வாரங்கள் கண்காணிப்பில் இருக்க வேண்டும் என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரசன்னா தம்பதியர் சென்னையில் ‘‘பென்சி பெட்ஸ்டே’’ என்ற வளர்ப்பு பிராணிகள் மையம் நடத்தி வருகின்றனர். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. பிராணிகள் தான் குழந்தைகள் என்று கூறுகின்றனர்.

‘‘ எங்களது குடும்ப உறவுகளை விட பிரசன்னா தம்பதியர் எங்கள் மீது அதிக அக்கறை கொண்டிருந்தது மகிழ்ச்சியாக உள்ளது’’ என்று அனுராக் தெரிவித்தார்.