மருத்துவ கனவுடன் வாழ்ந்த அனிதாவை மண்ணோடு புதைத்துவிட்டனர்!! கமல் சாடல்

திருவனந்தபுரம்:

மருத்துவ கனவுடன் வாழ்ந்த மாணவி அனிதாவை மண்ணோடு புதைத்துவிட்டனர் என நடிகர் கமல் விமர்சனம் செய்தார்.

திருவனந்தபுரத்தில் நிருபர்களிடம் கமல் கூறுகையில், ‘‘ எவ்வளவு பெரிய அவமானம் இது? இந்த விவகாரத்தில் உடனடியாக அந்த பெண் என்ன ஜாதி, மதம், எந்த ஊர் என்று பேச வேண்டாம். அனிதா என்னுடைய மகள் போன்றவள். அவரது பெயர் ஸ்ருதி, அக்ஷரா என்றிருந்தால் மட்டும்தான் நான் அவருக்காக வருத்தப்பட வேண்டுமா? மாணவி அனிதா தற்கொலை செய்துக் கொண்டது மிகவும் வேதனை அளிக்கிறது.

நீட் விவகாரத்தில் இன்று வருகிறது நல்ல செய்தி என கூறியவர்கள் எல்லாம் காணாமல் போய்விட்டார்கள். நீட் தேர்விற்கு எதிராக வாதாட வேண்டியவர்கள் எல்லாம் பேரம் பேசிக்கொண்டு இருக்கிறார்கள். மத்திய அரசு, மாநில அரசு, நீதிமன்றம் எல்லாம் நம்மால் உருவாக்கப்பட்டவை’’ என்றார்.

மேலும், அவர் கூறுகையில், ‘‘அங்கெல்லாம் வாதாட வேண்டியவர்கள் பேரம் பேசிக் கொண்டிருந்ததால் நேர்ந்த விபரீதம் இது. மாணவி அனிதா தற்கொலைக்கு எதிராக அனைவரும் போராட வேண்டும். கட்சி எல்லைகளை எல்லாம் தாண்டி இதில் செயல்பட வேண்டும். அனிதா உங்கள் மகள் போன்றவள். என் மகள் போன்றவள். மருத்துவ கனவுடன் வாழ்ந்த மாணவியை மண்ணோடு புதைத்துவிட்டனர்.

மாணவி அனிதா பிளஸ் 2 தேர்வில் பெற்றுள்ள மதிப்பெண்களைப் பார்த்தால் நாம் நல்ல மருத்துவரை இழந்துவிட்டோம். சாதி, கட்சி பாகுபாடின்றி நியாயத்திற்காக அனைவரும் போராட வேண்டும்.

மாணவிக்கு இன்னும் மன உறுதி வேண்டும் என்று சொல்லப்படும் அறிவுரையினை ஏற்றுக் கொள்கிறேன். இந்த அநீதிக்கு எதிரான போராட்டத்தில் மக்கள் அனைவரும் பங்கு பெற வேண்டும். தமிழக அரசியல் நிலவரம் மிகவும் வேடிக்கையாக உள்ளது, எந்த பக்கமும் சாயமாட்டேன்’’ என்றார்.

You may have missed