பீகார் மாநில இளநிலை பொறியாளர் தேர்வு பட்டியலில் ”சன்னி லியோன்” முதலிடம்

பாட்னா

பீகார் மாநில பொதுச் சுகாதார பிரிவில் இளநிலை பொறியாளர் தேர்வு பட்டியலில் 98.5%  மதிப்பெண் பெற்று சன்னி லியோன் முதல் இடத்தில் உள்ளதாக தகவல்கள் வந்துள்ளன.

பீகார் மாநில அரசின் பொதுச்சுகாதாரத் துறையில் 214 இளநிலை பொறியாளர் பதவி காலி இடங்கள் இருந்தன.  இதற்கான தகுதி தேர்வில் 17,911 பேர் கலந்துக் கொண்டுள்ளனர்.   இந்த தேர்வில்  பெற்றுள்ள மதிப்பெண்களில் அடிப்படையில் முதலிடம் பெற்றுள்ள 642 பேர் கொண்ட  பட்டியல் இணைய தளத்தில் வெளியாகி உள்ளது.

இதில் 98.5% மதிப்பெண் பெற்று சன்னி லியோன் என்னும் பெண் முதல் இடத்தில் இருப்பதாக காணப்படுகிறது.   பிரபல கவர்ச்சி நடிகை சன்னி லியோன் பெயர் கொண்ட இந்தப் பெண்ணின் தந்தை பெயராக லியோனா லியோன் என குறிப்பிடப்பட்டுள்ளது.   27 வயதான திருமணமாகாத இந்தப் பெண் 5 வருடம் அனுபவம் உள்ளவர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இது குறித்து அந்த துறையின் இணை செயலர் அசோக் குமார், “இது யாரோ வேண்டுமென்றே செய்த ஒரு குறும்பாகும்.   விண்ணப்பதாரர் தங்கள் விண்ணப்பத்தில் அளித்தபடி அவர் பெயர் மற்றும் தந்தை பெயரை நாங்கள் பதிந்துள்ளோம்.   இதில் துறை ஏதும் மாற்றம் செய்யவில்லை” என விளக்கம் அளித்துள்ளார்.

இந்த விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வில் கலந்துக் கொள்ள உள்ளதாகவும் அப்போது அவர்களின் பெயர் உள்ளிட்ட விவரங்கள் சோதிக்கப் படும் எனவும் கூறப்படுகிறது.  நேர்முக தேர்வில் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் 214 பேர் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

அதே நேரத்தில் இந்த பட்டியலில் உள்ள ஒரு நபரின்பெயர் BVCXZBNNB என ஆங்கிலத்தில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.   அவருக்கு மூன்றாம் இடம் கிடைத்துள்ளது.