கோரக்பூர்

ஒரு பள்ளி மாணவி தன்னிடம் பாலியல் சீண்டல் செய்தவனை நடு ரோட்டில் செருப்பால் அடித்ததற்காக பள்ளியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

கோரக்பூர் நகரில் உள்ள ஒரு பள்ளியில் ஒரு மாணவி 11 ஆம் வகுப்பில் படித்து வருகிறார். அவர் கடந்த வியாழக்கிழமை அன்று பள்ளியில் இருந்து வீட்டுக்கு வந்துக் கொண்டிருந்தார். அப்போது அவர் பின்னால் வந்த ஒரு 25 வயது இளைஞர் இந்த பெண்ணை தரக்குறைவாக கிண்டல் செய்வது உள்ளிட்ட பாலியல் சீண்டலில் ஈடுபட்டார். அந்த மாணவி சாலையைக் கடந்து எதிர்ப்புறம் சென்றுள்ளார்.

ஆயினும் விடாமல் அந்த இளைஞர் அந்த மாணவியின் பின்னே சென்று சீண்டலை தொடர்ந்துள்ளார். அந்த மாணவி அவரை நடு ரோட்டிலேயே தனது  செருப்பால் சரமாரியாக அடித்து விட்டு அவசர காவல்துறைக்கு தொலைபேசியில் புகார் அளித்துள்ளார். காவல்துறையினர் அந்த இளைஞரை கைது செய்துள்ளனர். இந்த நிகழ்வினால் அந்த மாணவியை அங்கிருந்த மக்கள் பாராட்டி உள்ளனர்.

ஆனால் நேற்று அந்த மாணவியை பள்ளி நிர்வாகம் பள்ளியில் இருந்து நீக்கி உள்ளது. இது குறித்து அந்த மாணவி, “சனிக்கிழமை அன்று நான் பள்ளிக்கு சென்றதும் எங்கள் பள்ளி முதல்வர் என்னை அழைத்து நான் சாலையில் வன்முறை செய்து பள்ளியின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததாக தெரிவித்தார். அத்துடன் என்னை பள்ளியில் இருந்து நீக்கி எனது டி சி யை கொடுத்து விட்டார். மேலும் நான் இந்த விவகாரத்தில் தேவையற்ற நாடகம் ஆடி விவகாரத்தை ஊதி பெரிதாக்கி விட்டதாக கூறினார்” என தெரிவித்துள்ளார்.

இது குறித்து அந்த பள்ளி முதல்வர் “அந்த மாணவி பள்ளி முடியும் முன்பே வீட்டுக்கு கிளம்பிச் சென்றுள்ளார். இது பள்ளி விதிகளுக்கு முரண் என்பதால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது அவரை தண்டிக்காமல் விட்டால் மற்ற மாணவிகளும் பள்ளி விதிகளை மீறலாம்” என தெரிவித்துள்ளார்.

அந்த பள்ளியில் பணி புரியும் ஆசிரியை ஒருவர், “ஒரு துணிச்சலான பெண்ணின் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுப்பதால் மற்ற பெண்கள் அநீதியை எதிர்த்து போராட தயங்கும் நிலை உண்டாகும்” என தெரிவித்துள்ளார்.