ஊசிக்கு மாற்றாக ஆமை வடிவ மாத்திரை: இன்னும் 3 ஆண்டுகளில் செயல்பாட்டுக்கு வரும்

நியூயார்க்:

புற்றுநோய் உட்பட பல்வேறு வியாதிகளுக்கு ஊசி போடுவதற்குப் பதிலாக. மாத்திரை வடிவிலான ஊசியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


ஆமை வடிவிலான இந்த ‘சோமா’ எனப்படும் மாத்திரை போன்ற கருவி, உள்ளே சென்று தானாகவே மருந்தை ரத்தத்தில் செலுத்தும்.

இந்த கருவி முதலில் எலி மற்றும் பன்றிகளிடம் சோதித்துப் பார்க்கப்பட்டது. இது வெற்றியடைந்ததால், இன்னும் 3 ஆண்டுகளில் மனிதர்களுக்கும் இந்த ‘சோமா’ மாத்திரை கருவியை செலுத்தி சோதித்துப் பார்க்க முடிவு செய்துள்ளதாக பிரவுன் பல்கலைக்கழகத்தின் விஞ்ஞானம் மற்றும் பொறியியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த கருவி வயிற்றுக்குள் சென்று மருந்தைசெலுத்தும்போது முள் தைப்பது போன்று வலியைகூட உணர முடியாது. எவ்வளவு மருந்தை ரத்தத்தில் செலுத்த வேண்டும் என்பதை முடிவு செய்யும் கருவியும் இதில் உள்ளது.

சர்க்கரை நோயாளிகளுக்கு சர்க்ரையின் அளவுக்கேற்ப இந்த கருவி மருந்தை ரத்தத்துக்குள் செலுத்தும். இந்த மாத்திரை வடிவிலான கருவியை உட்கொண்ட பின், மருந்து 10 நிமிடத்தில் கரைந்து, கருவி வயிற்றுப் பகுதிக்கு வந்துவிடும். பின்னர் மாத்திரை வடிவிலான கருவி தானாகவே வெளியேறிவிடும் என்கிறார் வேதியியல் பொறியாளர் ராபர்ட் லாஞ்சர்.

எலி மற்றும் பன்றிகளுக்கு இந்த மாத்திரை கருவியை செலுத்தி சோதித்த நியூயார்க் எம்ஐடி பல்கலைக்கழக மருத்துவ மாணவர் அலெக்ஸ் அப்ராம்சன் கூறும்போது, வழக்கமாக ஊசி போடும் போது பயன்படுத்தும் மருந்து அளவைத்தான் இதற்கும் பயன்படுத்தினோம்.

இந்த மாத்திரையை உட்கொள்ளும் முன்பு விலங்குகளின் வயிறு காலியாக இருந்தது. இதனை அடிக்கடி பயன்படுத்தினால் வயிற்றுப் பகுதிக்கு ஏதும் பாதிப்பு வராது. இந்த முறை பாதுகாப்பானது என்பது பரிசோதனையில் நிரூபனம் ஆகியுள்ளது என்றார்.