நுசா டெங்காரா, இந்தோநேசியா

ந்தோநேசியப் பெண் ஒருவர் மொபைல் பாஸ்வர்டை தர மறுத்த கணவரை எரித்துக் கொன்றுள்ளார்.

                                             மாதிரிப்படம்

இந்தோநேசியாவில் நுசா டெங்காரா என்னும் பகுதியில் வசிப்பவர் 26 வயது இளைஞரான டெடி புர்னாமா. இவருடைய மனைவி லிகாம் சயானி என்னும்  பெயருள்ள 25 வயது இளம்பெண் ஆவார். கடந்த ஞாயிற்றுக் கிழமை அதாவது ஜனவரி 12 அன்று டெடி தனது வீட்டுக் கூரையை பழுது பார்க்கும் பணியை செய்துக் கொண்டிருந்தார். அவர் மனைவி லிகாம் அவருக்கு உதவி செய்து வந்துள்ளார்.

அப்போது லிகாம் தனது கணவரின் மொபைல் பாஸ்வேர்டை கேட்டுள்ளார். அதை சொல்ல டெடி மறுத்துள்ளார். இதில் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் கோபம் அடைந்த கணவர் டெடி தனது மனைவி லிகாமை தாக்கி உள்ளார். இது மனைவிக்கு மிகவும் கோபத்தை ஏற்படுத்தி உள்ளது.

உடனடியாக அவர் அருகில் இருந்த பெட்ரோல் பாட்டிலை எடுத்து கணவர் மீது வீசி உள்ளார். அத்துடன் கணவரின் சிகரெட் லைட்டரால் கணவரை உயிருடன் எரித்துள்ளார். படுகாயம் அடைந்த டெடி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இரு தினங்கள் சிகிச்சை அளித்தும் அவர் சிகிச்சை பலனின்று மரணம் அடைந்தார்.

இது குறித்து வழக்கு பதிந்த உள்ளூர் காவல் துறையினர் லிகாம் சயானியை கைது செய்து விசாரணை நடத்தி உள்ளனர். அப்போது லிகாம் தனது கணவர் தம்மை தாக்கியதால் கொலை செய்ததாகவும் மொபைல் பாஸ்வேர்ட் தர மறுத்ததற்காக கொல்லவில்லை எனவும் தெரிவித்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெறுகிறது.