Random image

பசுமைக்காரன் குறித்து ஒரு பத்திரிக்கையாளனின் தேடல்!

நெட்டிசன்:

மூத்தபத்திரிகையாளர் பி.சிவசுப்ரமணியன் அவர்களது முகநூல் பதிவு:

“டாப் சிலிப்” தமிழகத்தின் இயற்கை எழில் மிகுந்த இடம். மேற்கு தொடர்ச்சி மலையின் பல்லுயிர் பெருக்கும் மிகுந்த பத்து இடங்களில் இதுவே முதன்மையானது.

1800-1900-க்கு இடைப்பட்ட காலத்தில், இந்த மலையிலிருந்த ஏராளமான தேக்கு மரங்கள் வெட்டி இங்கிலாந்துக்கு கொண்டு செல்லப்பட்ட பின்னர், மொட்டைக் காடாக கிடந்த இந்த மலைத்தொடருக்கு 1917-இல் வந்த ஆங்கிலேயே வனத்துறை அலுவலரான ஹூகோ வுட் என்ற IFS அலுவலர், இந்த மலைப்பகுதியை மறு சீரமைப்பு செய்யும் நோக்கில் நீலாம்பூர் தேக்கு மரக்கன்றுகளை இந்த மலையில் நடவு செய்துள்ளார்.

இன்று ஆனைமலை புலிகள் சரணாலயம் மற்றும் பரம்பிக்குளம் புலிகள் சரணாலய பகுதியில் இருக்கும் பல இலட்சம் தேக்கு மரங்களும் ஹூகோ வுட் அவர்களால் நடப்பட்டது.

ஹூகோ வுட் சமாதிக்கு அருகில் சிவசுப்பிரமணியன. தங்கராஜா பன்னீர்செல்வம் உள்ளிட்டோர்

இந்த மலைப்பகுதியில் மரம் நடுவதை மட்டுமே வேலையாக கொண்டிருந்த ஹூகோ வுட் அவர்கள் திருமணம் செய்து கொள்ளவில்லை. தனக்கென சொத்து எதையும் சேர்த்து வைக்கவில்லை. கடைசிவரை உலாந்தி பள்ளத்தாக்கில் உள்ள மவுன்ட் ஷ்வாட்ஸ் என்ற பெயருடைய வீட்டில் வசித்து வந்தவர் தனது 63-வது வயதில் மரணமடைந்துள்ளார்.

அவரது உடல் உலந்தி பள்ளத்தில் உள்ள ஹூகோ வுட் இல்லத்துக்கு அருகில் அவர் நட்டு வளர்த்த தேக்கு மரங்களுக்கு நடுவில் புதைக்கப்பட்டுள்ளது.

பணி ஓய்வு பெற்று இலண்டன் சென்ற அவர் தான் உயிரிழந்த பின் தனது உடலை மவுன்ட் ஷ்வாட்ஸ் இல்லத்துக்கு அருகில் புதைக்கவேண்டும் என்று உயில் சாசனம் எழுதியிருந்ததாகவும், அதன்படி அவருடைய உடல் டாப்சிலிப் கொண்டு வரப்பட்டு இந்த இடத்தில் புதைக்கப்பட்டுள்ளது என்று டாப்சிலிப்பில் இருந்த வனத்துறை அலுவலர்கள் கூறினார்கள்.

அவரது பிறப்பு மற்றும் மறைவை குறிக்கும் குறிப்புகளுடன், “என்னை பார்க்க நினைப்பவர்கள் என்னை சுற்றிப்பாருங்கள்.” எனக்கூறும் இலத்தின் வாசகத்துடன் அவரது நினைவிடம் அமைந்துள்ளது.

2014-ஆண்டில் ஒரு முறை நான் இந்த இடத்துக்கு வந்து சென்றேன். ஹூகோ வுட் அவர்களைப் பற்றி பல்வேறு விதமான செய்திகள் சொல்லப்பட்டாலும், எதற்குமே பதிவுகள் இல்லை. அவருடைய புகைப்படமும் இல்லை. அதன் பின்னர், பொள்ளாச்சியில் இருந்த மாவட்ட வன அலுவலர் திரு.அசோகன், சேலம் மண்டல அவன அலுவலர் திரு,கணேசன், கோவை காஸ் மியூசியம் நிர்வாகி கிரீசன், கோவை வனக்கல்லூரி கண்காணிப்பாளர் இரவிக்குமார், மன்னார்குடி வனச்சரகர் தங்கராஜ், அமராவதி வனச்சரக அலுவலர் தங்கராஜா பன்னீர்செல்வம், என பல வனத்துறை அலுவலர்களிடம் விசாரித்தும் திரு.ஹூகோ வுட் அவர்களை பற்றி பல செய்திகள் கிடைத்தாலும், ஹூகோ வுட் எங்கே பிறந்தார், அவரது முழுப்பெயர் என்ன, எங்கே இறந்தார், எப்படி அவரது உடல் இங்கே கொண்டுவந்து புதைக்கப்பட்டது…? போன்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவேயில்லை.

சிவசுப்பிரமணியன – தங்கராஜா பன்னீர்செல்வம்

கோவை மாவட்ட வன அலுவலகம், நீலகிரி மாவட்ட வன அலுவலகம், கோவை மண்டல வன அலுவலகம், சென்னை முதன்மை வணக்காப்பாளர் அலுவலகம் என பல இடங்களுக்கு தகவலறியும் உரிமைச்சட்டம் 2005-ன் கீழ் கடிதம் அனுப்பியும் எல்லோருமே எனது கடிதத்தை பொள்ளாச்சியில் உள்ள ஆனைமலை புலிகள் காப்பாகத்திற்கு அனுப்பி விட்டனர். கோவை மண்டல வன அலுவலகத்தில் இருந்து நீங்கள் கேட்டுள்ள தகவல் 20-ஆண்டுகளுக்கு முந்தயது. அதனால், இதை பெற உங்களுக்கு உரிமையில்லை என்று அதிபுத்திசாலித்தனமான பதிலை அனுப்பினார்கள்.

நான் மேலே சொன்ன அனைத்து அதிகாரிகளுமே திரு.தங்கராஜா பன்னீர்செல்வம் தான் நீண்ட நாளாக உலாந்தி வனச்சரகத்தில் பணியாற்றியவர். அவர்தான் ஹூகோ வுட் அவர்களின் வீடு மற்றும் நினைவிடத்தை மறு சீரமைப்பு செய்தவர். வுட் அவர்களைப்பற்றி அதிகமான தேடல் கொண்டவர் என்று சொன்னார்கள்.

அவரிடம் பேசியபோது, “தமிழக வனத்துறையிலும் சரி, இந்திய வனத்துரையிலும் சரி, ஹூகோ வுட் அவர்களை பற்றிய எந்த பதிவுகளும், சான்றுகளும் இல்லை. இலண்டனில் உள்ள “கிவ் கார்டன்” என்ற தாவரவியல் ஆய்வகத்தில் ஏதாவது செய்திகள் இருக்கலாம். நான் அங்கு மட்டும் இன்னும் முயற்சி செய்து பார்கவில்லை…” என்றார்.

இதையடுத்து, என்னைப் பற்றிய சிறு குறிப்புடன் திரு. ஹூகோ வுட் அவர்களின் செவிவழிச் செய்திகளை கூறி, அவரது கல்லறையின் புகைப்படத்தையும் சேர்த்து Kew Gardens நிறுவனத்துக்கு மின்னஞ்சல் செய்தேன்.

பத்து நாளில், ஹூகோ வுட் பற்றிய எந்த செய்தியும் எங்களிடம் இல்லை. ஆனால், இங்கிலாந்து ஆவணக்காப்பகத்தில் ஏதாவது செய்திகள் இருக்கலாம். நீங்கள் அங்கே தொடர்பு கொள்ளுங்கள் எனக்கூறி, அந்த நிறுவனத்தின் ukarchive மின்னஞ்சல் முகவரியை அனுப்பினர். அங்கும் மின்னஞ்சல் செய்தேன். மன்னிக்கவும், எங்களிடமும் ஹூகோ வுட் பற்றிய தரவுகள் இல்லை. ஆசியான் பசிபிக் அண்டு ஆப்ரிக்கன் கவுன்சில் என்ற மற்றொரு நிறுவனத்தின் apac-enquiries@bl.uk மின்னஞ்சல் முகவரியை அனுப்பினர்.

அங்கும் நான் கேட்ட ஹூகோ வுட் அவர்களை பற்றிய தரவுகள் எங்களிடம் இல்லை. மும்பை, பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் சென்னை, பிரிட்டிஷ் நூலகம் ஆகிய இரு இடங்களில் உங்களுக்கு ஹூகோ வுட் அவர்களை பற்றிய தரவுகள் கிடைக்கும் என்று அந்த இரு நிறுவனத்தின் மின்னஞ்சல் முகவரியை அனுப்பினர்.

நான் மேலே சொன்ன அனைத்து நிறுவனமும் எனக்கு ஹூகோ வுட் அவர்களை பற்றிய செய்திகளை தரமுடியவில்லை என்பதற்காக என்னிடம் வருத்தம் தெரிவித்துக்கொண்டதுடன், ஒருவேளை ஹூகோ வுட் ஏதாவது பயனுள்ள செய்தி உங்களுக்கு கிடைத்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள் என்று என்னைக் கேட்டுக்கொண்டனர்.

விடா முயற்சியாக மும்பையிலுள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு நான் மின்னஞ்சல் அனுப்பிய நான்காம் நாளே, ஹூகோ வுட் அவர்களைப் பற்றி 1955-இல் வெளியான டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதளின் ஒரு பக்கத்தையும், மும்பை கிறிஸ்து சர்ச்சில், தாமஸ் வில்லியம்ஸ் – எலிசபெத் லூயிசிய என்ற பெற்றோர்களுக்கு பிறந்த குழந்தையின் பெயர் ஆன்றோ பிரான்சியஸ் ஹியூகோ என்பதாகும், அவருடைய குடும்ப பெயர் தான் வுட் என்ற பதிவுகள் கொண்ட ஆங்கிலேயர்களின் பிறப்பு பதிவு நூலின் இரு பக்க நகலை எனக்கு அனுப்பினர்.

அடுத்த நாளே, சென்னை பிரிட்டிஷ் நூலகத்தில் இருந்து, ஹூகோ வுட் கன்சர்வேட்டராக பணி ஓய்வு பெற்றபின், காசநோய் தாக்குதலுக்கு உள்ளானதாகவும், குன்னூரில் உள்ள மருத்துவமனையில், சிகிச்சை பெற்று வந்த நேரத்தில், 24.10.1933-அன்று சென்னை மாநில வனத்துறை கன்சர்வேட்டருக்கு எழுதிய உயிலில் தன்னுடைய உடலை உலாந்தி வனபகுதியில் உள்ள மவுன்ட் ஸ்டுவார்ட் இல்லத்தின் அருகில் புதைக்கப் படவேண்டும் என்று அவர் எழுதியுள்ளார்.

அதன்படியே அவர் 12.12.1933-இல் அவர் மரணமடைந்த மறுநாள், அவரது உடல் புதைக்கப்பட்டதாகவும். அவரது உடலை எஸ்.பி.ஸ்டீபன்ஸ், “சேப்ளின் ஆப் கோவை” என்ற பெயரடைய கிறித்துவ மத போதகர் நல்லடக்கம் செய்ததாக கூறும் ஹூகோ வுட் அவர்களின் மரண சான்றிதழை அனுப்பியிருந்தனர்.

ஹூகோ வுட் அவர்களை பற்றிய இந்த மூன்று முக்கிய ஆவணங்களையும் வன அலுவலரான தங்கராஜா பன்னீர்செல்வம் அவர்களிடம் கொடுத்து, அவரது நினைவிடத்தில் வைக்கும் முயற்சியாக நேற்று எனது குடும்பத்துடன் டாப்சிலிப் சென்ற நான் ஹூகோ வுட் நினைவிடத்தில் வைத்து அவருடைய பிறப்பு மற்றும் மரணம் குறித்த பதிவுகளை திரு.தங்கராஜா பன்னீர்செல்வம் அவர்களிடம் ஒப்படைத்தேன்.

விரைவில் திரு.வுட் அவர்கள் வாழ்ந்த வீடும், அவரது நினைவிடமும் பொதுமக்கள் பார்வையிடும் இடமாக மாற்றும் முயற்சிகள் வனத்துறை சார்பாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக கூறிய பன்னீர்செல்வம் அவர்கள், வுட் அவர்களின் புகைப்படத்தை தேடிக்கொண்டுள்ளார்.