24 ஆண்டு தேடலுக்குப் பிறகு… சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலக குண்டுவெடிப்பு குற்றவாளி கைது

சென்னை:

சென்னை ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் நடைபெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 24 ஆண்டு தேடலுக்குப் பிறகு முக்கிய குற்றவாளி கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னையில் உள்ள ஆர்எஸ்எஸ் தலைமை அலுவலகத்தில் கடந்த 1993ஆம் ஆண்டு ஆகஸ்ட் 8ம் தேதி குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்தது. இதில் 11 பேர் பலியானார்கள்.

இந்த சம்பவத்தின் முக்கிய குற்றவாளியாக முஷ்டாக் அகமது என்பவர் அறிவிக்கப்பட்டார். குண்டை வெடிக்கச்செய்தது மற்றுமொரு குற்றவாளிக்கு இடமளித்தது என முஷ்டாக் மீது குற்றம்சாட்டப்பட்டது.  ஆனால் அவர் தலைமறைவாகிவிட்டார்.

முஷ்டாக் பற்றி துப்பு கொடுப்போருக்கு 10 லட்சம் ரூபாய் பரிசு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பக 18 பேர் மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கில்  2007ம் ஆண்டு  11 பேருக்கு தண்டனை அளித்து தீர்ப்பளிக்கப்பட்டது.

மூவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.  நான்கு பேர் விடுதலை செய்யப்பட்டனர். இருவர் மரணமடைந்திருந்தனர்.

இந்த குண்டு வெடிப்பு சம்பவம் தொடர்பாக 431 சாட்சிகளில் 224 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

இந்த நிலையில் 24 ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான முஷ்டாக் சிபிஐ அதிகாரிகளால்  கைது செய்யப்பட்டார்.

உடனடியாக சென்னை அழைத்து வரப்பட்ட அவர் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.