அதிமுகவை ஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும்: அமைச்சர் செல்லூர் ராஜு பரபரப்பு பேச்சு

மதுரை:

முதல்வர் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து  அமைச்சர் செல்லூர் ராஜு  புதிய விளக்கம் கொடுத்துள்ளார்.

தமிழகத்தில்  போலீஸ் துறை முதல்வர் எடப்பாடி கட்டுப்பாட்டில் உள்ளதால்தான்,  அவர் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அதைத்தொடர்ந்து மற்றொரு நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், அதிமுகவைஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும் என்றும் பேசி பரபரப்பை ஏற்படுத்தினார்.

மதுரை பெரியார் பேருந்து நிலையத்தில் புதிய பேருந்துகளை  தொடங்கி வைக்கும் நிகழ்ச்சியில் அம்மாவட்ட அமைச்சர் செல்லூர் ராஜு கலந்துகொண்டு பேசினார். அதைத்தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, அவரிடம், தமிழக நெடுஞ்சாலைத்துறை டெண்டரில் ரூ.4 ஆயிரத்து 800 கோடி அளவுக்கு முறைகேடுகள் நடந்துள்ளதாக கூறி தமிழக முதல்வர் மீது திமுக கூறிய புகார் குறித்து சிபிஐ விசாரிக்க சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது குறித்து கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்த அமைச்சர், போலீஸ் துறை முதல்வர் எடப்பாடி கட்டுப்பாட்டில் உள்ளதால் அவர் மீதான ஊழல் புகாரை சிபிஐ விசாரிக்க ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது என்று  விளக்கம் அளித்தார்.

மேலும்,  அதிமுக மீது குற்றம்சாட்டுவதையே திமுக தலைவர் ஸ்டாலின் வாடிக்கையாக கொண்டுள்ளார் என்றும் கூறினார்.

அதைத்தொடர்ந்து, மதுரையில் பெண்களுக்கான சைக்கிள் பேரணி பயிற்சி முகாமில் அமைச்சர் செல்லூர் ராஜூ பேசினார்.

அப்போது,  வருங்காலத்தில் அதிமுகவை யாராவது ஒரு பெண் வழிநடத்தும் காலகட்டம் வரும் என்றும்,  விரைவில் அதிமுகவிற்கு பெண்களின் தலைமை வரும்  என்றும் கூறினார்.

அமைச்சர் செல்லூர் ராஜூவின் பேச்சு அங்கிருந்த பெண்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. சசிகலாவை மனதில் வைத்துக்கொண்டு அமைச்சர் பேசுதாக கிசுகிசுத்தனர்.

அமைச்சர் செல்லூர் ராஜுவின் பேச்சு அதிமுக தலைவர்களிடையேயும் சலசலப்பை உருவாக்கி உள்ளது.