போலி கையெழுத்தில் காடுவெட்டி குருவின் மனைவி பெயரில் கடிதம்?

காடுவெட்டி குருவின் குடும்பத்தில் பலவித குழப்பங்கள் நடைபெற்றுவரும் நிலையில், அவரது மனைவி லதாவின் பெயரில் போலி கையெழுத்துடன் அறிக்கை வெளியிடப்பட்ட தாக சமூகவலைதளங்களில் பலரும் கருத்திட்டு வருகிறார்கள்.

பா.ம.க.வின் ஆணிவேர் என்று கருதப்படுவது  வன்னியர் சங்கம். இதன்  தலைவராக செல்வாக்குடன் வலம் வந்தவர் காடுவெட்டி குரு. பா.ம.க.வினராலும்  வன்னியர் சங்கத்தினராலும் மாவீரன் என்று அழைக்கப்பட்டவர். சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தவர்.

இந்த நிலையில் கடந்த மே மாதம் காடுவெட்டி குரு உடல் நலக்குறைவால் மறைந்தார்.

அதன் பிறகு, “காடுவெட்டி குரு மறைந்த நிலையில் வீட்டுக்கடன் கட்ட முடியாத அளவுக்கு பண நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆகவே காடுவெட்டி குரு பயன்படுத்திய வாகனத்தை விற்க இருக்கிறோம். வாங்க விரும்புகிறவர்கள் அணுகவும்” என்று காடுவெட்டி குருவின் அக்காள் மகன், தனது முகநூல் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார்.  இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

(சொர்ண)லதா

அதே நேரம், பா.ம.க. தரப்பில் இருந்து காடுவெட்டி குரு குடும்பத்துக்கு உதவப்போவதாக தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மனைவி (சொர்ண)லதா ஒரு கடிதம் எழுதியதாக முகநூலில் சிலரால் பதிவிடப்பட்டது. அதில், “என் கணவர் காடுவெட்டி குரு மறைந்த பிறகு, திக்குதிசை தெரியாமல் தவிக்கிறேன். என் மகள் விருதாம்பிகை, மகன் கனலரசன் ஆகியோரைக்கூட பார்க்கமுடியவில்லை. எங்களது சொத்துக்காக எங்களை ஏதாவது செய்துவிடுவார்களோ என்று பயமாக உள்ளது.  அய்யா (பா.ம.க. நிறுவனர் ராமதாஸ்)தான் எங்களுக்கு நல்லவழி காட்டவேண்டும்” என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

9.11.2018 அன்று வெளியான கடிதம்

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகன் கனலரசன், தனது முகநூல் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டார்.

அதில், தனது தாயார் (சொர்ண)லதாவை பல நாட்களாக காணவில்லை என்றும். அவரது உறவினர்கள் அவரை பலவந்தமாக எங்கோ அடைத்து வைத்திருக்கிறார்கள் என்றும் அவரை மீட்க பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் உதவ வேண்டும் என்றும் கோரிக்கை வைத்திருந்தார்.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின்  மகள் விருதாம்பிகைக்கும்  குருவின் மூன்றாவது தங்கை சந்திரகலாவின் மகன் மனோஜூக்கும் சுவாமிமலையில் எளிய முறையில் திருமணம் நடந்தது.

திருமண விழாவில் மணமகன் மனோஜ் குடும்பத்தினர் அனைவரும் கலந்துகொண்டனர். மணமகள் விருதாம்பிகாவின் தாயார் கலந்துகொள்ளவில்லை.  அவரது மகனும் மணமகள் விருதாம்பிகாவின் தம்பியுமான கனலரசன் கலந்துகொண்டார்.

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகைக்கும், மணமகன் மனோஜூக்கும் சிலர் கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தகவல் பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது குறித்து மணமகன் மனோஜ், “எங்கள் மாமா காடுவெட்டி குருவின் தாயாரும் எங்கள் பாட்டியுமான கல்யாணியம்மாள் காடுவெட்டியில் இருக்கிறார். முதுமை காரணமாக அவர்  எங்களது திருமண நிகழ்வில்  கலந்துகொள்ளமுடியவில்லை.

12.11.2018 அன்று வெளியான கடிதம்

திருமணம் முடிந்ததும் அவரிடம் ஆசீர்வாதம் பெறவும், காடுவெட்டியில் இருக்கும்  குரு மாமாவின் நினைவிடத்தில் வழிபடவும் திட்டமிட்டோம். அதற்காக காடுவெட்டிக்கு புறப்பட்டோம்.

இந்த நிலையில், காடுவெட்டியில் இருந்து ஒரு தகவல் வந்தது. அங்கே தனியாக இருக்கும் எங்கள் பாட்டி கல்யாணியம்மாளிடம் சிலர் வந்து மிரட்டியிருக்கிறார்கள்.

“எங்களைக் கேட்காமல் எப்படி திருமணம் செய்தீர்கள்? மணமக்கள் காடுவெட்டி ஊருக்குள் கால் வைக்கக்கூடாது. அப்படி வந்தால் என்ன நடக்கும் என்றே சொல்ல முடியாது” என்று மிரட்டியிருக்கிறார்கள். இதனால் பயந்துபோய், எங்களை காடுவெட்டிக்கு வரவேண்டாம் என்கிறார்கள்” என்றார்.

பிறகு மணமகள் – மணமகன் ஆகயோர் கும்பகோணம் அனைத்து மகளிர் நிலையத்தில் தஞ்சம் புகுந்தனர். தங்களது உயிருக்கு சிலர் அச்சுறுத்தல் ஏற்படுத்துவதாக புகார் தெரிவித்தனர்.

இந்த நிலையில் கடத்தி வைக்கப்பட்டுள்ளார் என்று மகன் கனலரசனால் கூறப்பட்ட காடுவெட்டி குருவின் மனைவி சொர்ணலதா காடுவெட்டி கிராமத்துக்கு வந்தார்.  அங்கு செய்தியாளர்களிடம் பேசிய (சொர்ண)லதா, “உடல் நலம் இல்லாமல் சென்னையில் உறவினர் வீட்டில் சிகிச்சை பெற்று வந்தேன். கால்வேறு உடைந்துவிட்டது. என் மகளின் திருமணம் குறித்த எனக்கு எந்வதவித தகவலும் வரவில்லை..

இந்த திருமணத்தில் எனக்கு விருப்பம் இல்லை.

நான் கடத்தப்பட்டதாக  என் மகன் கூறியது தவறு. அவன் சிறு குழந்தை அவனுக்கு எதுவும் தெரியாது. டாக்டர் ராமதாஸ் எங்கள் குடும்பத்துக்கு  உதவவில்லை என்று கூறுவது தவறு. அவர் நிறைய உதவியிருக்கிறார்” என்று கூறினார்.

பிறகு காடுவெட்டி குருவின் மகள் விருதாம்பிகை மருமகன் மனோஜ் ஆகியோர், தங்களை காடுவெட்டிக்கு வரக்கூடாது என்று சிலர் மிரட்டுவதாகக் கொடுத்த புகாரின் பேரில் ஆர்.டி.ஓ. விசாரணை நடந்த்து.

இருதரப்பையும் விசாரித்த அதிகாரிகள், “காடுவெட்டி குருவின் மனைவி அவர் விரும்பும் இடத்தில் தங்கிக்கொள்ளலாம். அவரது உடல்நலன் பாதிக்கப்பட்டிருப்பதால் உதவிக்கு அவரது உறவினரை துணைக்கு வைத்துக்கொள்ளலாம். இதை யாரும் தடுக்கக்கூடாது.

அதே போல காடுவெட்டி குருவின் உடன் பிறந்தவர்களின் குடும்பங்கள் தங்கள் காடுவெட்டியில் உள்ள தங்கள் பாட்டி வீட்டுக்கு வந்து செல்வதையும் யாரும் தடுக்கக்கூடாது” என்று உத்தரவு பிறப்பித்தனர்.

ஆர்.டி.ஓ. அறிக்கை

இந்த நிலையில் காடுவெட்டி குருவின் மனைவி (சொர்ண)லதாவின் பெயரில் வெளியான கடிதங்களை அவர் எழுதவில்லை என்றும் அவரது பெயரை போலியாக யாரோ கையெழுத்திட்டு வெளியிட்டிருக்கிறார்கள் என்றும் முகநூலில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

மேலும், “9.11.2018 அன்று வெளியான கடிதத்தில்  “G.Latha” என்று கையெழுத்திடப்பட்டிருக்கிறது. பிறகு 12.11.2018 அன்று வெளியான கடிதத்தில்  “G.லதா” என்று கையெழுத்து இடப்பட்டுள்ளது.

4.12.2017  அன்று ஆர்.ஏ.ஓ. விசாரணை முடிவில் G.Latha என்று கையெழுத்திட்டிருக்கிறார் காடுவெட்டி குருவின் மனைவி (சொர்ண)லதா.

அவர் ஆங்கிலத்தில்தான் கையெழுத்திடுவார் என்பது இதன் மூலம் உறுதியாகிறது. ஆனால் 12.11.2018 அன்று அவரது பெயரில் வெளியான கடிதத்தில் “G.லதா” என்று கையெழுத்து இருப்பது எப்படி” என்று சமூகவலைதளங்களில் சிலர் பதிவிட்டு வருகிறார்கள்.

#letter #kaduvetti guru’s wife”s name in fake signature