டெல்லி: டெல்லி ஷாகீன் பாக் போராட்ட களத்தில் துப்பாக்கியால் சுட்ட நபரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக டெல்லி ஷாகீன்பாக் பகுதியில் பெண்கள் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கடந்த மாதத்தில் கடும் பனி கொட்டிய போதும் அவர்கள் போராட்டத்தை கைவிட வில்லை.

பெண்கள் குழந்தைகளுடன் போராட்ட களத்தில் இறங்கி இருக்கின்றனர். புத்தாண்டும் போராட்டக் களத்தில்தான் கொண்டாடப்பட்டது. போராடும் மக்களுக்கான உணவுகள், இன்னும் பிற பொருள்கள் தன்னார்வ அமைப்புகள் மூலமும் அந்தப்பகுதியை சேர்ந்த மக்களாலும் வழங்கப்படுகிறது.

இந் நிலையில் போராட்டக்கள பகுதிக்கு துப்பாக்கியுடன் வந்த மர்ம நபர் ஒருவர்  திடீரென சுட ஆரம்பித்தார். அவரை பாதுகாப்பாக நின்றிருந்த போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.

இந்த நாடு இந்துக்களுக்கானது… யாருக்கும் விட்டுத் தர மாட்டோம் என்று கூறியபடியே முழங்கிய அந்த நபரை போலீசார் வாகனத்தில் அழைத்து சென்றனர். கைது செய்யப்பட்ட அந்த நபரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

சிக்கிய நபர் யார்? யாரால் அனுப்பப்பட்டார், ஏதேனும் இந்துத்துவா அமைப்புகள் பின்னணியில் உள்ளனவா என்று போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.