கர்நாடகா : உறவுப்பெண்ணிடம் வரம்பு மீறியதால் இளைஞருக்கு தண்டனை அளித்த ஊர்மக்கள்

தேவராஹிப்பன்னி கர்னாடகா

ர்நாடகாவில் ஒரு கிராமத்தில் உறவுப் பெண்ணிடம் தவறாக நடந்துக் கொண்ட இளைஞருக்கு செருப்பினால் மாலை போட்டும் பாவாடை அணிவித்தும், அரை மொட்டை அடித்தும், பாதி மீசை எடுத்தும் ஊர்மக்கள்  தண்டித்துள்ளனர்.

கர்நாடகாவில் தேவராஹிப்பன்னி அருகே உள்ள சிற்றூர் ஒன்றில் வசிப்பவர் சங்கர் ராதோட்.  அவரின் உறவினரான உமாராஜ் ராதோட் பக்கத்து ஊரில் வசிப்பவர்.  உமாராஜ் தனது ஊரில் நடந்த ஒரு திருவிழாவுக்கு சங்கரை அழைத்துள்ளார். அங்கு சென்றதும் அனைவரும் மது அருந்தி உள்ளனர்.  உமாராஜ் வீட்டில் விருந்து நடைபெற்றுள்ளது.  சங்கர் விருந்து முடிந்து எழுந்திருக்கும் போது உமாராஜ் மகளின் கையைப் பிடித்து எழுந்ததாகவும் பின் அவரிடம் பாலியல் தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த உமாராஜ், தனது ஊர்மக்களுடன் சேர்ந்து சங்கரின் உடைகளைக் களைந்து அவருக்கு பெண் போல பாவாடை அணிவித்து செருப்பு மாலை அணிவித்து மேளத்துடன் ஊர் மத்திக்கு அழைத்து வந்தார்.  அங்கு சங்கரின் தலையில் பாதி மொட்டை அடிக்கப்பட்டது.  பின் மீசையில் பாதி மழிக்கப்பட்டது.

பின் தனது மகளை பலாத்காரம் செய்ய முயன்றதாக சங்கரின் மேல் உமாராஜ் போலிசில் புகார் அளித்தார்.  சங்கரும் தன்னை காரணமின்றி அவமானப்படுத்தியதாக புகார் கொடுத்தார்.  உமாராஜ் அளித்த புகாரின் பேரில் சங்கர் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.   சட்டத்தை கையில் எடுத்துக் கொண்டதற்காக போலிஸ் அதிகாரிகள் கிராம மக்களுக்கு கண்டனம் தெரிவித்தனர்.

சமூக ஆர்வலர்கள் ஏற்கனவே ஒரு ஆணை அவமானப்படுத்த வேண்டும் என்றால் அவனை பெண் என சித்தரிப்பது ஒரு வழக்கமாகி விட்டது என தெரிவித்துள்ளனர்.  ஒரு ஆணை பார்த்து அவன் ஒரு பெண் என்பதும், அவனுக்கு பெண்ணின் உடை அல்லது அணிகலன்களை அளிப்பதும் அவனுக்கு அவமானம் ஊட்டும் செயல் என சிறு வயதிலிருந்து ஒரு ஆணுக்குப் பழக்கப்படுத்தப் பட்டு விடுகிறது எனவும் கூறுகின்றனர்.

அரசியல் ஆர்வலர் பியாஸ்ரீ தாஸ்குப்தா, ”அரசியலிலும் இது சகஜம், ஒருமுறை பாஜக கட்சியை சேர்ந்த கிரிராஜ் சிங் சோனியா காந்தியை அவமானப் படுத்தும் வகையில் பேசினார்.  அதற்கு பதிலடி கொடுக்க லாலு பிரசாத் யாதவ் அவருக்கு வளையலை அனுப்பினார்.   மார்க்கண்டேய கட்ஜு உச்சநீதி மன்ற நீதிபதிகளை வளையல் அணிந்துக்கொள்ளுங்கள் எனக் கூறினார்.   அவ்வளவு ஏன் வளையலை அணியும் பெண்ணான ஸ்ம்ரிதி இரானி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாகிஸ்தானுக்கு எதிரான நடவடிக்கை எடுக்காததற்கு வளையல் அணிந்துக் கொள்ளவேண்டும் எனக் கூறி உள்ளார்.

ஆணும் பெண்ணும் சமம் என மேடைகளில் முழங்கும் அரசியல்வாதிகளே இவ்வாறு இருக்கையில், சாதாரண கிராம மக்களை எவ்வாறு குறை சொல்ல முடியும்?