தனிமையை போக்கும் தாய்லாந்து உணவகம்: பாண்டா கரடி பொம்மையுடன் உணவருந்த ஏற்பாடு

பாங்காக்:  தாய்லாந்து உணவகத்தில் சமூக இடைவெளியின் போது ஏற்படும் தனிமையை போக்கும் வகையில் பாண்டா கரடி பொம்மையுடன் உணவருந்துவது போன்ற புகைப்படம் வைரலாகி இருக்கிறது.

உலகம் எங்கும் கொரோனாவின் தாக்கம், அது தொடர்பான பின்னூட்டங்கள் ஓயவில்லை. சமூக விலகலை வலியுறுத்தும் நூதனமான விளம்பரங்களை பலரும் கையாண்டு வருகின்றனர்.

அதில் ஒரு உத்தியை தான் தாய்லாந்து நாட்டில் உள்ள ஒரு உணவகத்தில் பார்க்கலாம். அதாவது சமூக இடைவெளியை வலியுறுத்தும் வகையில் இந்த மாத தொடக்கத்தில் தாய்லாந்து வணிகங்களுக்கு சில கட்டுப்பாடுகளை தளர்த்தியது. காரணம்…கொரோனா வைரஸ் வழக்குகளின் எண்ணிக்கை குறைந்துவிட்டது தான்.

உணவகங்கள் சில கட்டுப்பாடுகளுடன் திறக்கப்பட்டன. பாங்காக்கில் உள்ள உணவகம் ஒன்று மனிதர்களின் தனிமையை போக்க ஒரு உத்தி செய்தது. அதாவது வாடிக்கையாளர்களுக்கு பதிலாக பாண்டா கரடி பொம்மையை அதன் உரிமையாளர்கள் ஒரு நாற்காலியில் அமர வைத்து உள்ளனர்.

தனியாக அமர்ந்து சாப்பிடுவர்களுக்கு ஏற்படும் அசௌகரியத்தை இதன் மூலம் குறைக்கலாம் என்பது எங்களின் எண்ணம் என்கின்றனர் அதன் உரிமையாளர் நாத்வுட் ரோட்சனபந்த்குல்.

இது குறித்து வாடிக்கையாளரான 25 வயது சாவிக் கூறியதாவது: நான் தனியாக சாப்பிடுகிறேன் என்ற உணர்வை இந்த பாண்டா கரடி பொம்மை இருப்பதன் மூலம் குறைகிறது என்றார்.