செய்திகளை முந்தித்தருவதில் போட்டி: தவறான செய்தியை வெளியிட்டு மாட்டிக்கொண்ட பிரபல நாளேடு

வேலூர் மக்களவை தேர்தலில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் வெற்றிபெற்றுள்ள நிலையில், அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் வெற்றி பெற்றுவிட்டதாக செய்தி வெளியிட்டுள்ள பத்திரிக்கை ஒன்று, தேர்தல் முடிவுகளுக்கு பின்னர் தனது இணைய E-Paper பக்கத்தில் மட்டும் செய்தியை மாற்றியுள்ளது.

தமிழகத்தில் கடந்த ஏப்ரல் மாதம் பொதுத்தேர்தல் நடைபெற்றது. அப்போது வேலூர் மக்களவை தொகுதியில் மட்டும் அதிக அளவில் பணம் பட்டுவாடா செய்யப்பட்டுள்ளதாக கூறி, தேர்தல் ரத்து செய்யப்பட்டது. அத்தோடு, தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டிருந்தது. இத்தகைய சூழலில் சமீபத்தில் தேர்தல் அறிவிக்கப்பட்டு, வாக்குப்பதிவும் நடைபெற்ற நிலையில், இன்று காலை 8 மணி முதல் 21 சுற்றுக்களாக வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டது. இதில் துவக்கத்தில் 6 சுற்றுக்களில் அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகிக்க, பின்னர் எண்ணப்பட்ட மற்ற சுற்றுக்களில் திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் முன்னிலை வகித்தார். இறுதியில் 8,141 வாக்குகள் வித்தியாசத்தில் கதிர் ஆனந்த் வெற்றி பெற்றார்.

இத்தகைய சூழலில், தமிழகத்தில் வெளியாகும் மாலை நாளேடான ”மாலை முரசு”, அதிமுக கூட்டணி வேட்பாளர் ஏ.சி சண்முகம் முன்னிலை வகித்து வந்ததை கணக்கில் கொண்டு, முன்னரே செய்தியை முதலில் கொடுக்க வேண்டும் என்று எண்ணி, ஏ.சி சண்முகம் வெற்றி பெற்றுவிட்டதாகவும், துரைமுருகனின் மகன் தோற்றார் என்றும் செய்தி வெளியிட்டிருந்தது. இவ்விவகாரம் தொடர்பாக சமூக வலைதளங்களில் கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டது.

இந்நிலையில், முதலில் வேலூர் தேர்தல் செய்தியை தங்களின் இணைய E-Paperல் மாற்றியமைத்த அந்நாளேட்டின் நிர்வாகம், பின்னர் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியுடன், அமைச்சர்கள் எஸ்.பி வேலுமணி மற்றும் ஜெயக்குமார் ஆகியோர் சந்தித்தது தொடர்பான புகைப்பட செய்தியையும் கூடுதலாக சேர்த்துள்ளது. செய்திகள் கூடுதலாக சேர்க்கப்பட்டதால், முகப்பு பக்கத்திலேயே 2 செய்திகள் படிக்க இயலாத வண்ணம் இருப்பதை கண்டறிந்து, மீண்டும் சமூகவலைதளங்களில் பலரும் கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

செய்திகளை முந்தித்தருகிறோம், முதலில் தருகிறோம் என்று ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகள் இடையே நடக்கும் இப்போட்டிகளால், உண்மையான நிகழ்வுகள் பல இதுபோன்ற தவறான செய்திகளால் மறைக்கப்படும் நிலை தொடர்கிறது.