டெல்லி: இந்திய மக்கள்தொகையில் இதுவரை 1 சதவீதத்துக்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று உள்நாட்டு விவகாரங்கள் தொடர்பான நாடாளுமன்ற குழு தெரிவித்துள்ளது. இவ்வளவு குறைவாக வேகத்தில் நாட்டு மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட பல ஆண்டுகள் ஆகும் என்று எச்சரித்துள்ளது.

நாடு முழுவதும கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போடும்பணி  கடந்த ஜனவரி 16-ம் தேதி  தொடங்கியது. முதல்கட்டமாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்கள பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த 1-ம் (மார்ச்) தேதி முதல் 60 வயதுக்கு மேற்பட்டோர், 45 வயதுக்குஉட்பட்ட நாள்பட்ட நோயாளிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. அடுத்தகட்டமாக 50 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடும் பணி விரைவில் தொடங்க உள்ளது.

இந்த நிலையில், மகாராஷ்டிரா, கேரளா, தமிழகம் உள்பட சில மாநிலங்களில் மீண்டும் தொற்று பரவல் அதிகரித்துள்ளதால், டுப்பூசிபோடும் பணியை தீவிரப்படுத்த அறிவுறுத்தப்பட்டு உள்ளது.

இதுதொடர்பாக  மத்திய சுகாதாரத் துறை  வெளியிட்டுள்ள  (மார்ச் 15ந்தேதி வரையிலான) புள்ளி விவரப்பட்டியலில் இதுவரை 3,29,47,432 தடுப்பூசிகள் பயனாளிகளுக்கும் போடப்பட்டிருக்கிறது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை தொடர்பாக காங்கிரஸ் தலைவர் ஆனந்த் சர்மா தலைமையிலான உள்துறை விவகாரங்களுக்கான நாடாளுமன்ற நிலைக்குழு நாடாளுமன்ற மாநிலங்களவையில் அறிக்கை  தாக்கல் செய்தது. அதில்,

இந்தியாவில் உள்ள மக்கள் தொகையில், இதுவரை  1%க்கும் குறைவானவர்களுக்கே கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இது தீவிரப்படுத்தப்பட வேண்டும்.

கொரோனா வைரஸ்  தொடர்ந்து மரபணு மாற்றம் பெற்று வருவதாலும் உலகில் பல்வேறு பகுதிகளில் புதிய வகை  வைரஸ் தொற்று பதிவாகி வருவதாலும் இது மிகவும் கடுமையான பிரச்சினை என்று குழு நம்புகிறது

கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டவர்களில் பலர் 2வது டோஸை போடுவதை தவிர்த்துள்ளனர்.

மத்திய ஆயுதமேந்திய போலீஸ் படை (சிஏபிஎஃப்) பணியாளர்கள் மற்றும் மாநில காவல்துறையினர் உட்பட அனைத்து முன்னணி சுகாதார ஊழியர்கள் மற்றும் கொரோனா வீரர்கள் பரிந்துரைக்கப்பட்ட அளவு தடுப்பூசிகளைப் பெற வேண்டும்.

விரைவில் அதிகபட்ச மக்களுக்கு முடிந்தவரை தடுப்பூசி போட முயற்சிக்க வேண்டும்.

மக்கள் தொகை குறைவாக உள்ள லட்சத்தீவில் அனைவருக்கும் தடுப்பூசி போட முடியும்  உள்பட பல பரிந்துரைகள் வழங்கப்பட்டுஉள்ளன.

மேலும், நாடாளுமன்ற குழுவினரிடம்  உள்துறை அதிகாரிகள் தெரிவித்த கருத்துக்கள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி,

தடுப்பூசி மீதான பொதுமக்களின் தயக்கத்திற்கு எதிராக சிறப்பு பிரச்சாரம் தொடங்கப்பட்டுள்ளது என்றும்,  “தடுப்பூசி இயக்கத்தின் வேகத்தை அதிகரிப்பதற்காக மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் வழக்கமான மதிப்புரைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும் கோவிட் -19 தடுப்பூசியின் பல்வேறு செயல்பாட்டு அம்சங்கள் குறித்து அவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு உள்ளது.

“கொரோனா  தடுப்பூசியின் பாதுகாப்பு, செயல்திறன் மற்றும் நோயெதிர்ப்புத் திறன் பற்றிய விழிப்புணர்வை தேசிய மற்றும் மாநில அளவில் செயல்படுத்த ஒரு தகவல் தொடர்பு மூலோபாயம் உருவாக்கப்பட்டுள்ளது’’ என்று உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.