டில்லி

மோடி அரசு ஆட்சிக்கு வரும் முன்பு கொடுத்த வாக்குறுதிகள் பலவற்றை நிறைவேற்றாததால் மக்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மக்களவை தேர்தலில் பாஜக மாபெரும் வெற்றி பெற்று அரசை கைப்பற்றியது. எதிர்க்கட்சியினர் என்னும் அந்தஸ்தையும் எந்த கட்சியும் பெறாத அளவுக்கு இடங்களை அப்போது பாஜக கைப்பற்றியது.  தேர்தல் பிரசாரத்தின் போது பாஜக மற்றும் மோடி அலை வீச தொடங்கிஉள்ளது எனவும் நல்ல நாட்கள் வர தொடங்கி உள்ளதாகவும் பிரசாரத்தில் பாஜகவினர் தெரிவித்தனர்.

அந்த பிரசாரத்தின் போது பாஜக மொத்தம் 50 முக்கிய வாக்குறுதிகளையும் சுமார் 600 சிறிய வாக்குறுதிகளையும் அளித்தது. இதை நம்பிய மக்கள் பாஜகவுக்கு வாக்களித்து பெரும் வெற்றி பெற வைத்தனர். முக்கியமாக அனைவருக்கும் வீடு, ஸ்மார்ட் சிடி, அனைத்து கிராமங்களுக்கும் மின் வசதி, தூய்மை இந்தியா உள்ளிட்ட பல திட்டங்களை வாக்குறுதிகளாக தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டது.

இந்த வாக்குறுதிகளில் பல இன்னும் நிறைவேறாமல் உள்ளன. இந்தியாவில் அனைத்து கிராமங்களுக்கும் மின்சார வசதி கிடைத்ததாக அரசு அறிவித்ததும் தவறு என புள்ளி விவரங்கள் மூலம் தெரிய வந்தது. தூய்மை இந்தியா திட்டமும் இதே நிலையில் உள்ளது. வீட்டு மானிய திட்டமும் மக்கள் எதிர்பார்த்த அளவுக்கு பயன் தரவில்லை. அது மட்டுமின்றி பல வாக்குறுதிகளும் இன்னும் முழுமையடையாமல் உள்ளது.

அத்துடன் மோடியின் கனவு திட்டமான புல்லட் ரெயில் திட்டத்துக்கு பாஜக தலைவர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருவது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே ஓடும் ரெயில்களில் உள்ள குறைகளை நீக்காமல் புல்லட் ரெயில் திட்டத்தை தொடங்கியது தவறு என பலரும் தெரிவித்துள்ளனர். இந்த எதிர்ப்பு பாஜகவின் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் வந்துள்ளது.

அடுத்ததாக மோடி அறிவித்த பணமதிப்பிழப்பு நடவடிக்கை கடுமையாக விமர்சிக்கப்பட்டு வருகிறது. இதனால் இந்திய பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதாக பல வல்லுனர்கள் கூறி உள்ளனர். பொதுமக்கள் இந்த நடவடிக்கையால் கடுமையாக பாதிக்கப்பட்டதுடன் சில உயிரிழப்பும் ஏற்பட்டது. இந்த நடவடிக்கையை வரவேற்றவர்களும் எதிர்க்கும் நிலை ஏற்பட்டது. அரசு கூறியபடி பணமதிப்பிழப்பு நடவடிக்கை சரியாக திட்டமிடாததால் கருப்புப் பண ஒழிப்பு என்பது நடக்கவில்லை.

அடுத்தது ஜி எஸ் டி வரியை மோடி அரசு அமுலுக்கு கொண்டு வந்தது. இதுவும் சரியாக திட்டமிடாததால் பல தொழில்களை நசுக்கியது. அதிக வரி விதிப்பில் உள்ள பொருட்கள் சிறிது சிறிதாக இன்னும் குறைந்த வரி விதிப்புக்கு கொண்டு வரப்படுகின்றன. அத்துடன் வரிக்கணக்கு அளிப்பதில் வர்த்தகர்கள் மிகவும் குழப்பம் அடைந்தனர்.

மோடி அரசின் இது போன்ற பல நடவடிக்கைகளால் மக்கள் கடும் அதிருப்தி அடைந்துள்ளனர். இந்த அதிருப்தி நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நன்கு எதிரொலித்தது. அதன் பிறகு அரசியல் நோக்கர்கள் பலரும் மோடி அரசின் நாட்கள் எண்ணப்படுகின்றன என கருத்து தெரிவித்துள்ளனர். மேலும் மோடி அரசு கொண்டு வந்த நல்ல நடவடிக்கைகளும் சரியான திட்டமிடல் இல்லாததால் மக்களுக்கு நன்மை அளிப்பதற்கு பதில் தீமையில் முடிந்துள்ளதாகவும் மக்களில் பலர் எண்ணுகின்றனர்.

இந்த வருட மத்தியில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மோடி அரசு சுதாரித்து ஏதும் நன்மை செய்யலாம் என பலர் எதிர்பார்க்கின்றனர். ஆனாலும் ஆட்சிய்யின் இறுதிக் கட்டத்தில் உள்ளதால் அது பயன் அளிக்குமா என்பதும் சந்தேகமாகவே உள்ளது. மொத்தத்தில் மோடி தனக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை நழுவ விட்டுள்ளார் என மக்கள் கருதுகின்றனர். வரும் தேர்தலில் அவர் முழுமையாக நழுவ விட்டாரா என்பது தெரிய வரும்.