இடமிருந்த வலமாக : சன்வர்மல். கிருஷ்ணா வர்மா, பிரபுதயாள் சர்மா

பிரதாப்புரா, ராஜஸ்தான்

ராஜஸ்தான் மாநிலத்தில் நான்கு ஆசிரியர்களைக் கொண்ட ஒரு சம்ஸ்கிருத பள்ளியில் ஒரு மாணவர் கூட கல்வி பயிலவில்லை.

ராஜஸ்தான் மாநிலம் சிக்கார் மாவட்டத்தில் உள்ள ஒரு ஊர் பிரதாப்புரா.  இங்கு ஒரு சமஸ்கிருதப் பள்ளி 1998 ஆம் வருடம் ஆரம்பிக்கப்பட்டது.  அக்கம்பக்கம் ஊரிலுள்ள மாணவர்களும், உள்ளூர் மாணவர்களும் இங்கு சேர்ந்து கல்வி கற்றனர்.  மெதுவாக மாணவர்களின் எண்ணிக்கை குறைய ஆரம்பித்தது.  2005ல் 55 மாணவர்கள் படித்த இந்தப் பள்ளியில் 2015-16 கல்வியாண்டில் வெறும் நான்கு மாணவர்கள் மட்டுமே படித்தனர்.  அவர்களின் பெற்றோர்களும் இந்தக் கல்வியாண்டில் அந்த மாணவர்களை வேறு பள்ளிக்கு மாற்றி விட்டனர்.

வெகுநாட்களாக சுவரில் சுண்ணாம்பு கூட அடிக்காமல் பழைய கட்டிடம் போல் தெரியும் இந்தப் பள்ளியில் நான்கு ஆசிரியர்கள் உள்ளனர்.  ஆறு வகுப்பறகள் உள்ளன.  ஆனால் பள்ளிக்கு அவசியத் தேவையான மாணவர் ஒருவர் கூட இல்லை.  அங்குள்ள வகுப்பறைகள், விளையாட்டு மைதானம் எல்லாமே வெறிச்சோடிக் கிடக்கிறது.

நான்கு ஆசிரியர்களும் நேரம் தவறாமல் காலை 8 மணிக்கு வருகின்றனர். அங்குள்ள செடிகளுக்கு நீர் ஊற்றுகிறார்கள். செய்தித்தாள்கள் படிக்கின்றனர். ஒருவருக்கொருவர் உரையாடுகிறார்கள்.  மதியம் 2 மணிக்கு அங்கிருந்து கிளம்பி தங்கள் வீடுகளுக்கு போகிறார்கள்.   குறித்த நேரத்தில் ஊதியம் வந்து விடுகிறது.  ஆனாலும் வேலை இல்லாமல் ஊதியம் பெறுவது மனதுக்கு கஷ்டமாக இருப்பதாக ஆசிரியர்கள் கூறுகின்றனர்.

“இப்படி பணி புரியாமல் ஊதியம் பெறுவது எங்களுக்கு அவமானமாக இருக்கிறது.  ஒரு காலத்தில் மாணவர்கள் நிறைந்திருந்த இந்தப் பள்ளியில் இப்போது ஒருவர் கூட இல்லாதது வருந்தத் தக்கது “ என்று தலைமை ஆசிரியர் சன்வர்மல் கூறுகிறார்.  அங்குள்ள ஒரே பெண் ஆசிரியை ஆன கிருஷ்ணா வர்மா கூறுகையில், “எங்களுக்கு ஒன்றும் செய்யாமல் உட்கார்ந்திருக்க முடியவில்லை,  ஊர்மக்களில் சில வயதானவர்கள் வந்து எங்களுடன் பேசி செல்வதால் தான் பொழுது போகிறது” என்கிறார்.

அவர் சொன்னது போல 300 பேர் வசிக்கும் அந்த ஊரில், வயதானவர்கள் தான் பெரும்பாலும் இருக்கிறார்கள்.  பக்கத்து பெரிய ஊர்களிலும், வேறு மாநிலங்களிலும் அவர்களின் மக்கள் பணி புரிவதால், இவர்கள் மட்டுமே தனியாக வசிக்கிறார்கள்.

அக்கம் பக்கத்து ஊர்களில் பள்ளிகள் இல்லாத போது இங்கு நிறைய மாணவர்கள் படித்ததாகவும், தற்போது ஒவ்வொரு ஊரிலும் பள்ளிகள் உள்ளதால் இங்கு மாணவர்களை சேர்ப்பதில்லை எனவும் கூறப்படுகிறது.  இங்கு படித்த மாணவர்களில் பலர் புகழ்பெற்ற பொறியாளர்களாகவும், மருத்துவர்களாகவும், ஒருவர் மூத்த போலிஸ் அதிகாரியாகவும் உள்ளனர்.

இதே மாவட்டத்தில் உள்ள வேறு சில பள்ளிகளில் சமஸ்கிருத ஆசிரியர்கள் தேவைப் படுவதால் அங்கு தங்களை மாற்றச் சொல்லி ஆசிரியர்கள் பலமுறை கேட்டுக் கொண்டும் அரசு செவி சாய்க்கவில்லை என்பதே இந்த ஆசிரியர்களின் மனக்குறை.