நமது ஊரில் பண்டமாற்று முறை நடைமுறையில் இருந்தது. பிறகு, நாணயங்கள் அறிமுகப்படுத்தப் பட்டது. காகிதம் வந்தபிறகு, “பணத்தாள்” அறிமுகப்படுத்தப்பட்டது.

ரோமர்கள் முதன்முதலாக (352 கி.மு.) காசோலைகளை அறிமுகப்படுத்தியபோது மக்கள் புருவத்தை உயர்த்தினர். இது மக்களுக்கு விநோதமாக இருந்தது.
( கி.பி. 1500 ஆண்டுவாக்கில் ஹாலந்தில் செக் முறை பரவலாக பயன்படுத்தபடத் துவங்கியது எனச் சான்றுகள் உள்ளன)

காலமாற்றத்தில், இப்போது புதிய புதிய வழிகள் அறிமுகப்படுத்தப் பட்டு வருகின்றன.

நம்மில் பலர் கடைக்குச் சென்று பொருட்கள் வாங்கியவுடன், பாக்கெட்டில் கையை விட்டால், பர்ஸ் இருக்காது. வீட்டிலேயே மறந்து வைத்துவிட்டு வந்திருப்போம். பிறகு தலைச் சொறிந்துக் கொண்டே வருவோம்.

இத்தகைய மறதி ஆசாமிகளுக்கு வரப்பிராசதமாய் பயோமெட்ரிக் பணப்பரிவர்த்தனை முறை அறிமுகப்படுத்தியுள்ளது ஒரு நிறுவனம்.
கடந்த சில ஆண்டுகளாக, ஒருவரின் ஸ்மார்ட்போனையே பணப் பரிவர்த்தனைகளுக்குப் பயன்படுத்த முடியும் என்று இருந்தது.
சமீபத்தில், பயோமெட்ரிக் முறையில், தங்களின் கைரேகையை மட்டும் வைத்தால் போதும், பணபரிவர்த்தனை செய்துவிட முடியும் முறையை ஒரு நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

அதாவது கையை வீசிக் கொண்டே கடைக்குப் போகலாம். பணம் செலுத்த தங்களின் கைரேகையை மட்டும் ஸ்தாலெர்( Sthaler) நிறுவனத்தின் ஒரு கருவியின் மீது வைத்தால் போதும். மிகவும் பாதுகாப்பாய் உங்கள் பணப் பரிவர்த்தனை நடந்துவிடும்.

பணப் பரிவர்த்தனை நிறுவனம் ஸ்தாலெர்(Sthaler) தலைமை நிர்வாகி, நிக்கோலஸ் டிரைடன், இந்த தொழில்நுட்பம் வட லண்டனில் உள்ள கேம்டென் சந்தையில் உள்ள “ப்ரவுட் (proud)” மதுபான நிலையத்தில் (பார்) வெற்றிகரமாகச் சோதிக்கப் பட்டு விட்டது.
விரைவில் பல்பொருள் அங்காடிகள், சினிமாக்கள் மற்றும் இசை விழாக்களில் போது சோதனை செய்யப்படும்” என்று ஸ்கை செய்திகளுக்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார்.

” அதிக எண்ணிக்கையிலான மக்கள் கூடும் பல்பொருள் அங்காடியில் சோதனை நடத்துவது எங்களுக்கு மிகவும் முக்கியமானது,” என்று அவர் கூறினார்.

“நான் பலமுறை கடைக்குச் செல்லும் போதும் உணவுவிடுதிக்குச் செல்லும் பொதும் பணப்பையை மறந்துவிடுவேன். பலரும் வெளியில் செல்லும்போது பர்ஸை மறப்போம்.. ஆனால், நீங்கள் உங்கள் கைவிரலை மறக்கமாட்டீர்கள்.” என்றார்.

பணபரிமாற்றத்திற்கு உங்கள் உடல்உறுப்பைப் பயன்படுத்துவது ஒரு வினோதமான யோசனையாகத் தோன்றலாம், ஆனால் அது ஒரு நவீன போக்கு (Trend) ஆகும்.
இது போன்ற தொழிற்நுட்ப முன்னேற்றம் பிரிட்டிஷ் வங்கியாளர்கள் சங்கத்திற்கு மிகுந்த உற்சாகத்தை ஊட்டியுள்ளது.

தலைமை நிர்வாகி ஆன்டனி பிரவுன், இதுகுறித்து கூறுகையில், “இன்னும் பத்தாண்டுகளில், நாம் வங்கியைப் பயன்படுத்தும் முறை தற்போதைய முறையைவிட வித்தியாசமானதாக மாறிவிடும்” என்றார்.

“- பணபரிமாற்றங்களுக்கு மக்கள் பாதுகாப்பான பயோமெட்ரிக் முறைகளையோ, அல்லது அதனைவிட எளிதான முறைகளையோ பயன்படுத்துவர். பணத்தாள், கடன்-அட்டையைப் பயன்படுத்துவதைவிட தங்களின் விரல், அல்லது கருவிழியைப் பயன்படுத்துவது அதிகரிக்கும்.

இந்த முறைகளின் சிறப்பு என்னவென்றால், கண்களையோ, கைவிரலையோ வெட்டி எடுத்துச் சென்று போலியாய் பணபரிவர்த்தனை செய்ய முடியாது என்பது தான். அப்படி செய்ய முயற்சித்தாலும், அதனை ஸ்கேன் செய்ய முடியாது.