புதுடெல்லி: ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் காவலாளியாக பணிபுரியும் இளைஞர் ஒருவர், அந்த பல்கலையில் இளநிலைப் பட்டப் படிப்பு(BA) சேர்வதற்கான நுழைவுத்தேர்வை எழுதி தேர்ச்சிப் பெற்றுள்ளார்.

ராஜஸ்தானை பூர்வீகமாகக் கொண்ட 34 வயது ரம்ஜால் மீனாதான் அவர். அவருக்கு திருமணமாகி 3 குழந்தைகள் உள்ளனர். மாதம் ரூ.15000 சம்பளத்திற்கு ஜவஹர்லால் நேரு பல்கலையில் காவலாளியாக பணிபுரிகிறார். பணியின்போதே படித்து நுழைவுத்தேர்வில் தேறியுள்ளார் அவர்.

இவர் ஏற்கனவே, ராஜஸ்தான் பல்கலையில், தொலைநிலைக் கல்வி மூலம் அரசியல் அறிவியல், வரலாறு மற்றும் இந்தி ஆகியவற்றில் பட்டம் பெற்றுள்ளார்.

“கல்லூரியில் நேரடியாக சென்று படிக்க முடியவில்லையே என்பது எனக்குள் ஒரு ஆதங்கமாக இருந்தது. தற்போது, அந்தக் குறை நீங்கியுள்ளதாக நினைக்கிறேன். இங்குள்ள ஆசிரியர்கள் மற்றும் மாணாக்கர்கள் அனைவருமே பாகுபாடு பார்க்காமல் எனக்கு உதவி செய்தார்கள். அதனால்தான் எனக்கு நுழைவுத் தேர்வில் தேர்ச்சிபெற முடிந்தது.

நான் எனது குடும்பத்தையும் காப்பாற்ற வேண்டியுள்ளதால், பகலில் பல்கலைக்கழகம் செல்லும் ஆசையை நிறைவேற்ற, இரவு ஷிப்ட் கேட்டுள்ளேன்” என்றார்.

“இவரின் கோரிக்கையை நடைமுறை ரீதியாக நிறைவேற்றுவது கடினம் என்றாலும், எங்களால் முடிந்த உதவியை நல்குவோம்” என்று தெரிவித்துள்ளார் அப்பல்கலையின் செக்யூரிட்டி அதிகாரி நவீன் யாதவ்.