மனிதநேயம்: பாக். உளவாளிக்கு உணவளித்து பராமரிக்கும் இந்திய காவல்துறை!

போபால்:

இந்திய உளவாளி என்று குற்றம் சாட்டி,  ஒருவருக்கு  பாகிஸ்தான் அரசு மரண தண்டனை அளித்திருக்கிறது. இந்த நிலையில் பாகிஸ்தான் உளவாளி ஒருவரை இந்தியாவின் மத்திய பிரதேச காவல்துறையினர் தங்கள் சொந்த செலவில்  உணவிட்டு பராமரித்து வருகின்றனர்.

இந்திய உளவாளி என குற்றம் சாட்டப்பட்டுள்ள குல்புஷன் ஜாதவ் என்ற இந்தியருக்கு, பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றம் நேற்று மரண தண்டனை விதித்தது. இதற்கு இந்திய அரசு கடும் கண்டனம் தெரிவித்து உள்ளது.

இந்த நிலையில் நெகிழ்வானதொரு விசயம், மத்திய பிரதேச மாநில தலைநகர் போபாலில் நடந்துள்ளது.

சஜீத் முனீர் என்ற பாகிஸ்தானியர் மீது அந்நாட்டில் கொலை வழக்கு நிலுவையில் இருந்தது. தலைமறைவாக இருந்த அவரிடம், பாக் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ., இந்தியாவில் உளவு பார்ப்பதற்காக அனுப்பியது. தனது அஸைண்மெண்ட்டை முடித்துக் கொடுத்தால், கொலை வழக்கிலிருந்து அவரை விடுவிப்பதாகவும் ஐ.எஸ் அமைப்பு  உறுதி அளித்தது.

இதை நம்பி இந்தியாவிற்குள் சட்டவிரோதமாக ஊருடுவிய சஜித், போபாலில் உள்ள ராணுவத் தளத்தை உளவு பார்த்த போது காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.  ராணுவ நீதிமன்றத்தில் நடந்த விசாரணையின் முடிவில் அவருக்கு 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சிறை வாசம் முடிந்ததால், கடந்த ஆண்டு ஜூன் 5-ஆம் தேதி சஜீத் விடுதலை செய்யப்பட்டார்.

அப்போதே  சஜீத் முனீரை பாகிஸ்தானுக்கு அனுப்புவது குறித்து, அந்நாட்டு அரசிடம் இந்திய அரசு தெரிவித்தது. ஆனால் கடந்த ஒரு ஆண்டாக இது குறித்த எந்த பதிலும் பாகிஸ்தான் அளிக்கவில்லை.

சஜீத் முனீர் இந்தியாவில் எங்கும் வேலைக்குப் போக முடியாது. அவரது இக்கட்டான சூழலைப் புரிந்துகொண்ட போபால் காவல் துறையினர் கடந்த 10 மாதங்களாக தங்கள் சொந்த செலவில் அவருக்கு உணவிட்டு பராமரித்து வருகிறார்கள்.

ஆம்.. இவருக்கான உணவு மற்றும் இதர செலவுகளை போபால் டி.எஸ்.பி ஏற்றுக் கொண்டுள்ளார்.

சஜித் முனீரை பாகிஸ்தானுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு உயரதிகாரிகளுக்கு தொடர்ந்து போபால் காவல்துறையினர் மனு அனுப்பி வருகின்றனர். ஆனால் பாகிஸ்தான்  தற்போது வரை மவுனம் சாதிக்கிறது.

Leave a Reply

Your email address will not be published.