சூரத்

சூரத் நகரை சேர்ந்த மாணவரான மெகுல் சோக்சி என்பவர் பிரதமர் மோடியை குறித்து பி எச்டி ஆய்வு கட்டுரை சமர்பித்துள்ளார்.

பிரபல வைர வியாபாரி நிரவ் மோடியும் அவர் கூட்டாளி மெகுல் சோக்சியிம் வங்கி மோசடி செய்து விட்டு நாட்டை விட்டு ஓடி விட்டனர்.   இந்த விவகாரத்தில் அவர்களுக்கு உதவி புரிந்ததாக பிரதமர் மோடி மீது எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன.   அதை அவர் மறுத்தாலும் அந்த பெயர்களுக்கும் அவருக்கும் தொடர்பு வேறு விதத்தில் நீடிக்கிறது.

காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி காவலரே திருடர் ஆனார் என கூறுவதை ஒட்டி பிரதமர் மோடி #நானும்காவலன்தான் என்னும் ஹேஷ்டாக்கை பிரபலமாக்கினார்.  நிரவ் மோடி என்பவர் அதை பகிர்ந்ததற்கு நன்றி தெரிவித்த மோடி அந்த பெயரை பார்த்து பதிவை அழித்தார்.   ஆயினும் அது நெட்டிசன்கள் விமர்சனத்துக்கு உள்ளானது.

 

வைர வியாபாரி மெகுல் சோக்சி

தற்போது சூரத் மாணவர் ஒருவர் மோடி குறித்து ஆய்வு நடத்தி தனது பிஎச்டி ஆய்வுக் கட்டுரையை வீர நர்மதா தெற்கு குஜராத் பல்கலைக் கழகத்துக்கு சமர்ப்பித்துள்ளார்.   அந்த மாணவர் பெயர் மெகுல் சோக்சி ஆகும்.   இவருக்கும் நாட்டை விட்டு ஓடிய வைரவியாபாரி மெகுல் சோக்சிக்கும் பெயரை தவிர வேறு எந்த தொடர்பும் கிடையாது.

மெகுல் தனது ஆய்வில் அரசு அதிகாரிகள், விவசாயிகள், மாணவர்கள், அரசியல் தலைவர்கள் உள்ளிட்ட 450 பேரை சந்தித்து 32 கேள்விகள் எழுப்பி உள்ளார்.  இந்த ஆய்வில் 25% பேர் மோடியின் உரை தங்களை கவர்ந்ததாக தெரிவித்துள்ளனர்.  அத்துடன் 48% பேர் மோடியின் அரசியலை பிடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

வழக்கறிஞரான மெகுல் சோக்சி தனது பிஎச்டி ஆய்வை கடந்த 2010 ஆம் வருடம் தொடங்கினார்.   அப்போது மோடியின் அரசியலுக்கு ஆதரவாக 51% பேரும் அவருடைய உரை தங்களை கவரந்ததாக 34.25% பேரும் கருத்து தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.