மேடவாக்கம் பகுதியில் உள்ள மின்சாதனம் விற்பனை கடையில் நள்ளிரவில் பயங்கர தீவிபத்து…

சென்னை: தாம்பரம் அருகே மேடவாக்கம் பகுதியில் உள்ள ஒரு மின்சாதங்கள் விற்பனை கடையில் நள்ளிரவு பயங்கர தீவிபத்து ஏற்பட்டது. 3 தீயணைப்பு வண்டிகள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

சென்னை வேளச்சேரியை அடுத்த மேடவாக்கம் – மாம்பாக்கம் பிரதான சாலையில் துரை ஹார்டுவேர்ஸ் என்ற பெயரில் மின் சாதனங்கள் விற்பனை கடை உள்ளது. இங்கு நள்ளிரவு கடையை மூடிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் திடீரென தீப்பற்றியது. சிறிதுநேரத்தில்  தீ மளமளவென  கொழுந்துவிட்டு எரிய துவங்கியது. அருகில் உள்ள கட்டிடங்களுக்கும் பரவியதால் அருகில் இருந்தவர்கள் நிலைமை அறிந்து கட்டிடத்தில் இருந்து வெளியே வந்தனர். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த தீ விபத்து குறித்து தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக மேடவாக்கம், தாம்பரம், வேளச்சேரி ஆகிய பகுதிகளை சேர்ந்த 30க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள்  3 தீயணைப்பு வாகனத்தில் வரைந்து வந்து, சுமார் 2 மணி நேரத்திற்கு மேலாக போராடி தீயை கட்டுப்படுத்தினார்.

தீயில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமாகியதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்தனர். மின் கசிவு காரணமாக தீ பற்றியிருக்கலாம் என முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.