டெல்லி 2019-2020ம் நிதி ஆண்டில், காங்கிரஸ் கட்சிக்கு  மொத்தம்  ரூ.139 கோடி நிதி வசூல் கிடைத்துள்ளது.  அதிகபட்சமாக கபில்சிபல் ரூ.3 கோடி நன்கொடை வழங்கி உள்ளார்.இந்த தகவல், தேர்தல் ஆணைய இணையதளத்தில் வெளியாகி உள்ளது.

2020ம் ஆண்டு பிப்ரவரி மாதம்  ஜனநாயகச் சீர்த்திருத்தங்களுக்கான கூட்டமைப்பு வெளியிட்ட தகவலின்படி,  அரசியல் கட்சிகளுக்க வாரி வழங்கப்பட்டுள்ள ரூ. 951 கோடி மொத்த நன்கொடைகளில் பாஜக மட்டுமே ரூ.742 கோடி பெற்றுள்ளது தெரிய வந்தது. அதே வேளையில், பகுஜன் சமாஜ் கட்சியில், கடந்த 13 ஆண்டுகளாக, தங்களக்கு ரூ.20,000 தாண்டி எந்த நன்கொடையும் வரவில்லை என்று கூறி வருகிறது. மேலும், அங்கீகரிக்கப்பட்ட தேசியக் அரசியல் கட்சிகளான  காங்கிரஸ், திரிணமூல், தேசியவாத காங்கிரஸ், பகுஜன் சமாஜ், சிபிஎம், சிபிஐ, செப்.30, 2019-ல் தங்களுக்கு ரூ.20000த்திற்கும் மேல் வந்த டொனேஷன் தொகை குறித்த கணக்குகளை தேர்தல் ஆணையத்திடம் சமர்ப்பித்தனர்  ஏடிஆர் அறிக்கையில்  குறிப்பிட்டிருந்தது.

மொத்த நன்கொடை தொகையில் சுமார் 92% கார்ப்பரேட், வர்த்தக, தொழில் துறையிலிருந்து கட்சிகளுக்கு வந்துள்ளது. அதாவது 876.11 கோடி ரூபாய்கள். கார்ப்பரேட் வர்த்தகத் துறை மேற்கொண்ட 1775 நன்கொடைகளில் 1575 நன்கொடைகள் பாஜகவுக்குச் சென்றன. அதாவது 692.08 கோடி ரூபாய் பாஜகவுக்கு தொழிற்துறை யினரிடமிருந்து மட்டும் கிடைத்துள்ளன. இதே துறையினரிடமிருந்து காங்கிரஸ் கட்சிக்குக் கிடைத்த நன்கொடை ரூ.122.5 கோடி எனவும் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், 2019-2020ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு மட்டும் கிடைத்துள்ள நிதி எவ்வளவு என்பது  குறித்து, அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  தேர்தல் ஆணையத்திற்கு  டிசம்பர் 30ந்தேதி  கட்சி நிதிக்கு பெற்ற நன்கொடை விவரங்களை அளித்திருக்கிறது.  அவை, தேர்தல் ஆணைய வளைத்தில் வெளியாகி உள்ளது.

அதன்படி, காங்கிரஸ் கட்சியின் இடைக்காலத் தலைவர், இடைக்காலத் தலைவராக உள்ள சோனியா காந்தி, ரூ.50 ஆயிரம் நிதி கொடுத்திருக்கிறார். ராகுல்காந்தி ரூ.54 ஆயிரம் கொடுத்திருக்கிறார். ராகுலைப் போலவே குலாம் நபி ஆசாத், ஆனந்த் சர்மா, சசிதரூர், மன்மோகன்சிங், ஆதிர்ரஞ்சன் சவுத்ரி, ஏ.கே.அந்தோணி, தற்போது பாஜகவில் உள்ள ஜோதிராதித்ய சிந்தியா, மறைந்த அகமதுபடேல் உள்பட ஏராளமானோர்  ரூ.54 ஆயிரம் வீதம் நிதி அளித்திருக்கிறார்கள்.

அதிக பட்சமாக  கபில்சிபல் மட்டும் ரூ.3 கோடி அளித்திருக்கிறார்.  மேலும் கார்ப்பரேட் நிறுவனங்களான  ஏர்டெல் ரூ.13 கோடியும், ஐ.டி.சி. ரூ.4 கோடியும், முத்தூட் பைனான்ஸ் ரூ.3 கோடி,  ஆர்எஸ்டபிள்யு நிறுவனம் ரூ.2 கோடி, எச்.இஜி டிமிடெட் ரூ.2 கோடி உள்பட பல நிறுவனங்கள் நிதிகளை வாரி வழங்கி உள்ளன.

2019-2020ம் ஆண்டில் காங்கிரசுக்கு மொத்தம் ரூ.139 கோடி நிதி கிடைத்திருக்கிறது. கடந்த 2018/19ம் ஆண்டில் காங்கிரஸ் கட்சிக்கு ரூ.146 கோடி நிதி கிடைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

நன்கொடை குறித்து முழுமையான தகவல் பெற தேர்தல் ஆணையத்தின் இணையதளத்தை நாடலாம்….

https://eci.gov.in/files/file/12817-indian-national-congress-contribution-report-fy-2019-20/