சீனாவில் நிகழ்ந்த கோர விபத்து – 31வாகனங்கள் அடுத்தடுத்து மோதியதில் 15பேர் உயிரிழப்பு; 44பேர் படுகாயம்

சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று தாறுமாறாக ஓடியதில் ஏற்பட்ட விபத்தில் 15பேர் உயிரிழதுள்ளனர். விபத்தில் படுகாயமடைந்த 44 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

china

சீனாவின் எக்ஸ்பிரஸ் சாலையில் உள்ள சுங்கச்சாவடி அருகே சென்றுக் கொண்டிருந்த லாரி ஒன்று ஓட்டுநர் கட்டுப்பாட்டை இழந்து, எதிரே வந்த கார் உள்ளிட்ட வாகங்கள் மீது மோதியது. இந்த விபத்தில் அடுத்தடுத்தாக 31 வாகனங்கள் ஒன்றன் மீது ஒன்று மோதி மிகப்பெரிய விபத்தை ஏற்படுத்தியது. தொடர்ச்சியாக 31 வாகனங்கள் ஒன்றன் மேல் ஒன்று குவிந்த பயங்கரக் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விபத்து குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விபத்தில் சிக்கியவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இத்தகைய கோர விபத்தில் இதுவரை 15 பேர் உயிரிழந்ததாக செய்திகள் வெளியாகி உள்ளன.

மேலும், 44 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதனால் உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சீனாவில் இது போன்று தொடர் வாகன மோதல் விபத்துகள் அடிக்கடி நிகழ்கிறது. போக்குவரத்து விதிமுறைகளை முறையாக ஓட்டுநர்கள் கடைபிடிப்பதில்லை என்ற புகார்கள் எழுந்துள்ளன.