வழி மறந்த பாட்டிக்கு உதவிய டிவிட்டர் பதிவு

சென்னை

வீட்டுக்கு செல்லும் வழியை மறந்த சென்னையை சேர்ந்த மூதாட்டி ஒருவருக்கு டிவிட்டர் பதவி உதவி செய்துள்ளது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று சென்னை திருவல்லிக்கேணி கோவில் அருகே ஒரு மூதாட்டி வீட்டுக்குச் செல்லும் வழியை மறந்து திண்டாடிக் கொண்டிருந்துள்ளார்.   அதைக் கண்ட பலரும் ஐஸ் ஹவுஸ் காவல் நிலையத்துக்கு தகவல் அளித்துள்ளனர்.   அந்தக் காவல் நிலைய ஆய்வாளர் கிருஷ்ணமூர்த்தி அங்கு சென்று சிவப்பு கலர் புடவை அணிந்திருந்த சுமார் 85 வயதான பெண்மணையைக் கண்டு காவல்நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளார்.

அந்தப் பாட்டிக்கு தனது பெயரும் கணவர் பெயரும் தவிர வேறு எதுவும் நினைவில்லை.   இது குறித்து ஆய்வாளர் கிருஷ்ண மூர்த்தி காவல்துறை வாட்ஸ்அப் குழுவிலும் தனது டிவிட்டர் பக்கத்திலும் பதிந்துள்ளார்.  அந்தப் பதிவில், “காவேரி என்னும் 85 வயதான பெண்மணி (ஸ்ரீனிவாசன் எனவரின் மனைவி) வழி தவறி விட்டார்.    அவர் தற்போது டி 3 காவல் நிலையத்தில் உள்ளார்.   அவர் தனது உறவினர்களுடன் சேரும் வரை இந்த செய்தியை பரப்பவும்”  என பதிந்தார்.

அவரது விலாசம் குறித்து விசாரித்த போது தாம் கோஷா ஆஸ்பத்திரி பக்கத்தில் வசித்து வருவதாக கூறி உள்ளார்.   அந்த மருத்துவமனையின் தற்போதைய பெயர் கஸ்தூரிபாய் காந்தி பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவ மனை ஆகும்.   அவரை அந்த மருத்துவமனையை சுற்றி உள்ள இடங்களுகு அழைத்துச் சென்றும் காவல்துறையினரால் அவர் வீட்டைக் கண்டுபிடிக்க முடியவில்லை.

காவல்துறையினர் அனைவரின் அன்புக்கும் பாத்திரமான அந்த காவேரி அம்மாளை அனைவரும் பாட்டி பாட்டி என அழைத்து அவருக்கு உதவிகள் செய்துள்ளனர்.    அதன் பிறகு அருகில் இருந்த ஒரு முதியோர் இல்லத்தில் அவரை சேர்த்துள்ளனர்.   இந்த செய்தி பலராலும் பரப்பப்பட்டு வந்துள்ளது.    வெளிநாடுகளில் இருந்தும் மும்பை போன்ற பிற மாநில நகரங்களில் இருந்து காவேரி பாட்டியைப் பற்றி பலரும் விசாரிக்க ஆரம்பித்துள்ளனர்.

அடுத்த நாள் மாலை அந்த மூதாட்டியின் உறவினர் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார்.   அவர், “காவேரி பாட்டி மைலாப்பூரில் உள்ள முதியோர் இல்லத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.   திடீரென ஒரு நாள் அங்கிருந்து வெளியேறி இருக்கிறார்.  திரும்பப் போக வழி தெரியாமல் திருவல்லிக்கேணி வந்துள்ளார்.   அவரைத் தேடி நாங்கள் மைலாப்பூர் காவல் நிலையத்துக்கு சென்ற போது அவர்கள் இங்கு அனுப்பி வைத்தனர்’ என தெரிவித்துள்ளார்.

டிவிட்டர் பதிவை படித்த பலரும் காவேரிப் பாட்டியின் மீது மிகவும் அக்கறை கொண்டுள்ளனர்.  அவர்களில் சிலர் பாட்டியின் உறவினர்களைக் கண்டு பிடிக்க முடியவில்லை எனில் அவரை தங்கள் பராமரிப்பில் வைத்துக்கொள்ளவும் முன் வந்துள்ளனர்.    ஒரு சிலர்  அவருடைய கை ரேகையைக் கொண்டு ஆதார் விவரம் அறிந்து அவரை வீட்டில் சேர்க்கலாம் எனவும் ஆலோசனை கூரி இருந்தனர்.

கார்ட்டூன் கேலரி