ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் சிகிச்சைக்கு வந்த 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு

ஆம்புலன்ஸ் கதவு திறக்காததால் அறுவை சிகிச்சைக்கு அழைத்து வரப்பட்ட 2 மாத குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. அரசு ஆம்புலன்சின் கதவு திறக்க வராததால் குழந்தைக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க முடியாமல் போனது.

ambulance

ராய்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்பூரில் வசித்து வரும் அம்பிகா குமார் தனது 2 மாத ஆண் குழந்தையை மருத்துவமனைக்கு எடுத்து செல்ல அவசரமாக ஆம்புலன்ஸ் வேண்டும் என்று தொலைபேசியில் தொடர்பு கொண்டு கேட்டுள்ளார். அதன்படி, குழந்தையை அழைத்துக் கொண்டு ராய்பூரில் உள்ள டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் வந்தது.

மருத்துவமனை வாசலில் ஆம்புலன்ஸ் நின்றதும் அதன் கதவை திறக்க மருத்துவமனை ஊழியர்கள் முயன்றபோது முடியவில்லை. ஆம்புலன்சின் கதவு லாக் ஆனதால் அதனை திறக்க முடியாமல் அனைவரும் திணறினர். குழந்தையின் தந்தை கதவை உடைக்க முயன்ற போது அரசாங்கத்தின் பொது சொத்தை சேதப்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று மருத்துவமனை ஊழியர்கள் கண்டித்துள்ளனர்.

தொடர்ந்து சில மணி நேரங்கள் ஆம்புலன்ஸ் கதவு திறக்க முயன்றும் முடியாததால் அதன் உள்ளேயே உயிருக்கு போராடிய குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. உயிரிழந்த 2மாத குழந்தைக்கு இருதய அறுவை சிகிச்சை செய்யப்படுவதற்காக மருத்துவமனைக்கு எடுத்து வரப்பட்டது. இருதய கோளாறால் பாதிக்கப்பட்ட குழந்தையை பரிசோதித்த எயிம்ஸ் மருத்துவர்கள் உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய டாக்டர் பீம் ராவ் அம்பேத்கர் மருத்துவமனைக்கு பரிந்துரை செய்தனர்.

இது குறித்து அம்புலன்ஸ் நிறுவனம் அளித்துள்ள விளக்கத்தில் ”ஆம்புலன்ஸ் சேவையில் எந்தவித குறைப்பாடும் இல்லை. குழந்தை ஏற்கனவே இறந்துள்ளது. அதனால் எந்தவித தயக்கமும் நிறுவனத்திற்கு இல்லை” என்று கூறியுள்ளது.

ஆம்புலன்ஸ் கதவு திறக்காத காரணத்தினால் குழந்தை உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.